மக்களின் பாதுகாவலன் – கூர்கா பட விமர்சனம்

நடிகர் யோகிபாபு
நடிகை எலிசா எர்ஹார்ட்
இயக்குனர் சாம் ஆண்டன்
இசை ராஜ் ஆர்யன்
ஓளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த்
சென்னையில் வாழக்கூடிய கூர்கா பரம்பரையில் பிறந்தவர் யோகி பாபு. போலீசாக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் இவர் போலீஸ் தேர்வுக்காக செல்கிறார். உடற்தகுதி இல்லாததால் வெளியேற்றப்படுகிறார். இவரைப் போலவே அங்கு தேர்வுக்காக வந்த அண்டர்டேக்கர் என்னும் நாயும் எதிலும் தேர்ச்சி பெறாததால் வெளியேற்றப்படுகிறது. இதிலிருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாகி விடுகிறார்கள். இந்த சூழலில் மனோபாலா நடத்தக்கூடிய செக்யூரிட்டி சர்வீசில் வேலைக்கு சேர்கிறார் யோகிபாபு.

அவரை அமெரிக்க தூதரான நாயகி எலிசா வீட்டில் செக்யூரிட்டியாக போடுகிறார் மனோபாலா. நாயகியை கண்டவுடன் காதல் வயப்படுகிறார் யோகிபாபு. இதனை அறிந்த மனோபாலா, யோகி பாபுவை வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்கிறார். இதையடுத்து, நாயகியும் யோகி பாபு பார்ப்பதற்காக அடிக்கடி வணிக வளாகத்திற்கு வந்து செல்வதுமாக இருக்கிறார். இந்த சூழலில் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு உடைய ராஜ் பரத் தலைமையிலான கும்பல் வணிக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். நாயகி மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை ராஜ் பரத் தலைமையிலான கும்பல் பணயக்கைதிகளாக பிடித்து வைத்து கொள்கிறது.

தகவலறிந்து போலீஸ் வணிக வளாகத்தை சுற்றி வளைத்தாலும் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இத்தகைய சூழலில் செக்யூரிட்டிகளான யோகிபாபு, சார்லி மற்றும் நாய் ஆகிய மூன்று பேரும் ராஜ் பரத் கும்பலிடம் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இவர்கள் அந்த கும்பலிடம் சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனரா? என்பது மீதிக்கதை.

படம் முழுக்க வரும் யோகிபாபு, காதல், காமெடி என கலக்கியிருக்கிறார். அமெரிக்க தூதராக வரும் நாயகி எலிசா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றியுள்ள சார்லி, நேர்த்தியான நடிப்பால் கவர்கிறார். 15 நிமிடமே படத்தில் வந்தாலும் காமெடியில் தெறிக்க விடுகிறார் ஆனந்த் ராஜ். யோகிபாபுவுடன் வரும் நாயும் சிறப்பாக நடித்துள்ளது.

இயக்குனர் சாம் ஆண்டன், கூர்காக்கள் சந்திக்கும் இன்னல்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு. மற்றபடி காமெடியை நம்பி மட்டுமே படம் எடுத்துள்ளார். ஒருசில இடங்களில் காமெடி எடுபடவில்லை. குழந்தைகளை கவரும் வகையில் படம் எடுத்துள்ளார். ராஜ்பரத் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். ராஜ் ஆர்யனின் இசை சொல்லும்படி இல்லை. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ’கூர்கா’ காமெடி தர்பார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.