பாட்னர் – விமர்சனம்

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஆதி தொழில் தொடங்குவதற்காக கடன் வாங்குகிறார். கடனை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர் கடனை கொடு இல்லை என்றால் உன் தங்கச்சியை திருமணம் செய்து கொடு என்று கண்டீசன் போடுகிறார். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ஆதி கடனை திரும்ப செலுத்துவதற்காக சென்னைக்கு வேலைக்கு செல்கிறார்.   சென்னையில் நண்பர் யோகி பாபு இருப்பதால் அவர் வேலை வாங்கி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ஆதி வருகிறார்.

ஆனால் யோகிபாபு கடத்தல் தொழிலில் ஈடுப்பட்டு சம்பாரித்து வருகிறார். வேறு வழியில்லாமல் ஆதியும் அவருடன் சேர்ந்து கடத்தல் தொழில் செய்கிறார்.   அப்போது விஞ்ஞானியான பாண்டியராஜனிடம் இருந்து அவரின் கண்டுபிடிப்பை திருடுவதற்காக ஜான் விஜய் வருகிறார். இந்த கடத்தலில் யோகிபாபுவிற்கு ஒரு ஊசி செலுத்தப்படுவதால் அவர் ஹன்சிகா போன்று மாறிவிடுகிறார்.   இறுதியில் யோகிபாபு மீண்டும் பழைய நிலைக்கு வந்தாரா? பாண்டியராஜின் கண்டுபிடிப்பை திருட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.  

நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ள ஆதி தனது எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். யோகிபாபுவாக மாறும் ஹன்சிகா அவரை போன்று நடிப்பதற்கு முயற்சி செய்து பாராட்டை பெறுகிறார். யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட், திருட்டு, அறிவியல் ஆராய்சி என திரைக்கதையை வடிவமைத்துள்ள இயக்குனர் மனோஜ் தாமோதரன் சீரியஸான இடத்திலும் காமெடியை புகுத்தியிருப்பது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது.

படம் சிறப்பாக இருந்தாலும் ஒரு சில காட்சிகள் படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கின்றன.   சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஷபீர் அகமது ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பு. மொத்தத்தில் பாட்னர் – கவனம் தேவை


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!