ஜியோ ஸ்டோர்ம் – சினிமா விமர்சனம்


நடிகர்: ஜெரார்டு பட்லர்
நடிகை: அபி கார்னிஷ்
இயக்குனர்: டீன் டெவ்லின்
இசை: லோர்ன் பால்பெ
ஓளிப்பதிவு: ராபர்டோ ஸ்கேஃபர்

உலகில் இயற்கை சீற்றத்தால் பல பேரழிவுகள் நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து டச்பாய் என்ற செயற்கை கோள் ஒன்றை உருவாக்குகிறார்கள். இந்த செயற்கோளை ஜெரார்ட் பட்லர் தலைமையில் உருவாக்குகிறார்கள். இதன் மூலம் இயற்கை சீற்றங்கள் தடுக்கப்படுகிறது.


இதன்பிறகு இந்த டீமில் இருந்து சில காரணங்களால், ஜெரார்ட் பட்லர் வெளியேறுகிறார். பின்னர் சில நாட்களில் ஒரு பாலைவனத்தில் பனி சூழ்ந்து, மக்கள் அனைவரும் உறைந்து போகிறார்கள். அதுபோல், மற்றொரு இடத்தில் எரிமலை வெடித்து ஊருக்குள் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், மீண்டும் தனது பழைய பணிக்கு திரும்புகிறார் ஜெரார்ட் பட்லர். செயற்கை கோளில் ஏதோ கோளாறு ஏற்பட்டதால் இதுபோன்று பாதிப்புகள் எற்படுகிறது என்பதை கண்டறியும் ஜெரார்ட் பட்லர், இதை சரி செய்யும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால், ஜெரார்ட்டுக்கு பல தடைகள் வருகிறது. யாரோ சட்ட விரோதமாக செயற்கை கோளை தவறாக உபயோகப்படுகிறார்கள் என்பதை உணர்கிறார்.


இறுதியில், செயற்கை கோளை தவறாக உபயோகப்படுத்துபவர்களை ஜெரார்ட் பட்லர் கண்டுபிடித்தாரா? உலக அழிவில் இருந்து தடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் கதாநாயகன் ஜெரார்ட் பட்லர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயற்கை சீற்றத்தில் இருந்து உலகை காப்பாற்ற நினைக்கும் இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவருக்கு தம்பியாக வரும் ஜிம் ஸ்டர்கஸ், ஜெரார்ட் பட்லரின் முயற்சிக்கு பக்க பலமாக இருந்து உதவி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


செயற்கை கோளால் இயற்கை சீற்றத்தில் இருந்து உலகை காப்பாற்ற முடியும் என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் டீன் டெவ்லின், செயற்கை கோளை ஜெரார்ட் பட்லர் சரிசெய்யும் காட்சி அசர வைக்கிறது. பல காட்சிகள் ரசிக்க வைக்கும்படி படத்தை இயக்கி இருக்கிறார்.

ராபர்டோ ஸ்கேஃபரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. லோர்ன் பால்பெவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஜியோ ஸ்டோர்ம்’ – அசுரவேக புயல்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!