பகாசூரன் – விமர்சனம்

முன்னாள் இராணுவ அதிகாரியான நட்டி நட்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அதன் மூலம் குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் ஆராய்ந்து வருகிறார். அப்படி ஒரு நாள் குற்றங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவரது அண்ணன் மகள் இறந்த செய்தியைக் கேட்டு சம்பவ இடத்திற்கு செல்கிறார்.

அவளது மரணத்தில் சந்தேகம் எழ குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையில் முழு முனைப்புடன் இறங்குகிறார் நட்டி. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இயக்குனர் செல்வராகவன் ஒரு கோவிலில் சேவகம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர் சிலரை தேடிதேடி பழிவாங்குகிறார். ஒரு கட்டத்தில் நட்டியின் விசாரணை செல்வராகவனை நோக்கி திரும்புகிறது. இறுதியில் நட்டி தன் அண்ணன் மகள் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? செல்வராகவன் ஏன் கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கிராமத்து கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் செல்வராகவன். எமோஷனல் காட்சிகளில் இவரின் நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது. தன்னுடைய கதாபாத்திரத்தை முழுமையாக ஏற்று நடித்து பாராட்டை பெறுகிறார். நட்டி நட்ராஜ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். ராதாரவி, கே.ராஜன் ஆகியோர் தேவையான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

தன் முந்தைய படங்களை காட்டிலும் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி. இணையத்தின் மூலம் வரும் பிரச்சினைகளை தனது திரைக்கதை மூலம் மிக அழகாக சொல்லியிருக்கிறார். இரண்டாம் பாதி சிறிது லாஜிக் மிஸ் ஆனாலும் கதையை ரசிக்கும் படியாக எடுத்துச் சென்றுள்ளார். சாம் சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் படத்தின் தரத்தினை உயர்த்தியுள்ளது. மொத்தத்தில் பகாசூரன் – ஆளுவான்

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!