நடிகை அபர்ணா முரளியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சட்ட கல்லூரி மாணவர்

தமிழ், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. சூர்யாவுடன் இணைந்து நடித்த சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது மலையாளத்தில் தங்கம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கான புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் படத்தை அறிமுகம் செய்து வைக்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் படத்தின் நாயகன் வினித் சீனிவாசனுடன் அபர்ணா பாலமுரளியும் பங்கேற்றார். விழா தொடங்கிய சிறிது நேரத்தில் அக்கல்லூரியைச் சார்ந்த மாணவர் ஒருவர், அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து வழங்கினார். அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அபர்ணா, மாணவருடன் கைகுலுக்கி கொண்டார்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவர் அபர்ணாவின் தோள் மீது கையைப் போட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட அபர்ணா, அவர் கையிலிருந்து வேகமாக நழுவினார். ஆனாலும் விடாமல் அபர்ணாவை பிடித்து இழுக்கும் விதமாக மாணவர் தகாத முறையில் நடந்துகொண்டார். அருகில் இருந்த தயாரிப்பாளர், ஹீரோ வினித் ஆகியோர் சத்தம் போட்டு மாணவரை கட்டுப்படுத்தினர்.

இதற்கு பின் மைக் எடுத்து பேசிய அந்த மாணவர், தான் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை என்றும், அபர்ணாவின் தீவிர ரசிகன் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்துகொண்டதாகவும் விளக்கமளித்தார். அத்தோடு நில்லாமல் மீண்டும் அபர்ணாவிடம் கை கொடுக்க வந்தார். ஆனால் அபர்ணாவோ, கையைக் கொடுக்காமல் வேண்டாம் என சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்தார். ஆனாலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!