அந்தகாரம் – விமர்சனம்

நடிகர் அர்ஜுன் தாஸ்
நடிகை பூஜா ராமசந்திரன்
இயக்குனர் விக்னராஜன்
இசை பிரதீப்குமார்
ஓளிப்பதிவு எட்வின் சகாய்
சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அர்ஜுன் தாசின் தொலைபேசியில் அடிக்கடி ஒரு மர்மமான அழைப்பு வந்து அவரை பயமுறுத்துவதும், உடலில் இருந்து ஆத்மாவை பிரிக்கப்போவதாக மிரட்டுவதுமாய் தொல்லை கொடுக்கிறது. வீட்டிலும் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் நடுங்குகிறார்.

இன்னொரு புறம் பார்வை இழந்த வினோத் கிஷன் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி மாற்று சிறுநீரகம் பொருத்த பணத்துக்கு அலைகிறார். பேய் ஓட்டும் மாந்திரீகம் அவருக்கு தெரியும். தொழில் அதிபர் வாங்கிய பங்களாவில் உள்ள ஆவியை விரட்டினால் பெரிய தொகை தருவதாக கூறுகிறார்கள். அதை ஏற்று பேய் பங்களாவுக்குள் செல்கிறார். அங்கே அவர் கடுமையாக தாக்கப்படுகிறார்.

மற்றொரு பக்கம் மனநல மருத்துவரான குமார் நடராஜனை ஒரு மனநோயாளி சுடுகிறான். இதனால் பேசும் திறன் இழக்கும் மருத்துவர் வேறொரு முடிவை எடுக்கிறார். இப்படி மூன்று பேரின் கதைகளை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தி ஒரே புள்ளியில் கொண்டு வருவதும் அர்ஜுன் தாஸை பயமுறுத்துவது யார்? வினோத் கிஷன் என்ன ஆகிறார்? மருத்துவரின் இன்னொரு முகம் என்ன? போன்ற மர்மங்களுக்கு விடை கொடுப்பதே படத்தின் மீதிக்கதை.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் மெருகேறி இருக்கிறார். வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பார்த்து பதறுவது, பேய்க்கு பயந்து குளியல் அறையில் ஒளிந்து நடுங்குவது, மர்மத்தை கண்டுபிடிக்க அலைவது என்று தேர்ந்த நடிப்பால் கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். இனி அவருக்கு அதிக வாய்ப்புகள் வரலாம்.

வினோத் கிஷன் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். தேர்வு எழுதும்போது நேர்மையாக நடப்பது, கஷ்டத்திலும் தந்தை வாழ்ந்த வீட்டை விற்க மறுப்பது என்று யதார்த்தம் மீறாத நடிப்பை கொடுத்துள்ளார். முடிவு, பரிதாபம். மன நல மருத்துவராக வரும் குமார் நடராஜனின் வில்லத்தனம் அதிர வைக்கிறது. பூஜா, மிஷா ஆகிய இருவரும் வசீகரிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கதையை உள்வாங்குவதில் குழப்பம் இருக்கிறது. போகப்போக பயம் திகிலுடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் அறிமுக இயக்குனர் விக்னராஜன். பிரதீப்குமாரின் பின்னணி இசையும், எட்வின் சகாய் ஒளிப்பதிவும் திகிலுக்கு உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘அந்தகாரம்’ மிரட்டல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!