ரிச்சி – சினிமா விமர்சனம்


பத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷரதா, இந்த கொலையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார்.

இந்த கொலையின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறது. இதைப்பற்றி பெரிய கட்டுரை எழுத போவாத சொல்லி, தூத்துக்குடி செல்கிறார் ஷரதா. அங்கு நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரின் கோணத்தில் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்கிறார். இறுதியில் அந்த கொலையின் பின்னணி நடந்தது என்ன? ஷ்ரதா அதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.


2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘உலிதவரு கண்டந்தே’ படத்தின் ரீமேக்காக ‘ரிச்சி’ உருவாக்கி இருக்கிறார்கள். மணப்பாடு லோக்கல் ரௌடியாக அசத்தியிருக்கிறார் நிவின் பாலி. வெற்றிலை வாய், பிஸ்டல் பவுச்சுடன் இணைந்த போலீஸ் பெல்ட், வித்தியாசமான நடை என நிவின் பாலி ரௌடிக்கான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

நட்ராஜ் இந்தப் படத்தில் படகு மெக்கானிக்காக தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருதலையாகக் காதலிக்கும் லட்சுமி பிரியாவிடம் எப்படியாவது காதலை ஏற்க வைக்க முயற்சிப்பதும், கடைசி வரை காதலைச் சொல்லாமல் சாகிற காட்சி என அசத்தியிருக்கிறார். குறிப்பாக புலியாட்டம் ஆடும் காட்சியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

படம் ஆரம்பத்தில் ஷ்ரத்தாவை சுற்றி கதை நகர்கிறது. ஆனால், அதிகமான காட்சிகள் அவருக்கு இல்லை. கதை கேட்கிற காட்சிகளில் மட்டுமே வருகிறார். படத்தின் இறுதியில் கண் கலங்கும் காட்சியில் பார்வையாளர்களையும் கலங்க வைக்கிறார். மீன் விற்கும் பெண்ணாக நடித்து மனதை கவர்ந்திருக்கிறார் லட்சுமி பிரியா.

நிவின் பாலியின் அப்பாவாகவும், ஊர் சர்ச் பாதராகவும் மனதில் பதிகிறார் பிரகாஷ்ராஜ். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் ராஜ் பரத்.

கதாபாத்திரங்கள் எவரும் குறை சொல்ல முடியாதளவிற்கு நடித்தாலும், படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் செல்கிறது. மூன்று பேர் கோணத்தில் திரைக்கதையை அமைத்து, அதில் சுவாரஸ்யம் இல்லாமல் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன். கதைகளம் வலிமையாக இருந்தாலும், சொன்ன விதம் வலிமை இல்லாமல் இருக்கிறது. நீண்ட காட்சிகள், தேவையில்லாத காட்சிகள் என படம் பார்ப்பவர்களை சோர்வடைய வைத்திருக்கிறார். ராவாக படத்தை இயக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம்.


முதல் பாதியில் திரைக்கதை தெளிவில்லாமலேயே நகர்கிறது. ரிச்சியின் வாழ்க்கைக்கு சாட்சியாக இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கதை சொல்லும் போக்கு கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்திருந்தால் படத்தை ரசித்திருக்கலாம்.

அஜனீஷ் லோக்நாத் இசையில் ஒரே பாடல் மட்டுமே படத்தில் இடம் பிடித்திருக்கிறது. அந்தப் பாடலும் கேட்கும் வித்தத்தில் அமைந்தது சிறப்பு. பின்னணி இசையில் பிரித்து மேய்ந்திருக்கிறார். நிவின் பாலியின் பி.ஜி.எம், புலியாட்டத்தின் போது ஒலிக்கும் ரணகளமான பறை இசை ஆகியவை படத்தின் களத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இருட்டில் அமைக்கப்பட்டாலும் காட்சிகளையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டி குமார்.

மொத்தத்தில் ‘ரிச்சி’ ஏமாற்றுகாரன்.-Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!