சீறு – விமர்சனம்

நடிகர் ஜீவா அமர்
நடிகை ரியா சுமன்
இயக்குனர் ரத்தின சிவா
இசை இமான்
ஓளிப்பதிவு பிரசன்னா குமார்

மாயவரத்தில் தொலைக்காட்சி சேனல் நடத்தி வரும் ஜீவாவுக்கும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும் பகை ஏற்படுகிறது. இதனால், ஆத்திரமடையும் எம்.எல்.ஏ, ஜீவாவை கொல்ல சென்னை வியாசர்பாடியின் பெரிய ரவுடியான வருணை மாயவரத்திற்கு அழைக்கிறார்.

இதைக் கேள்விப்பட்ட ஜீவா பயப்படாமல், ‘வருண் வரட்டும் பார்க்கலாம்’ என காத்திருக்கிறார். மாயவரத்திற்கு வரும் வருண், பிரசவ வலியில் துடித்த ஜீவாவின் தங்கையை மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றுகிறார். தன்னை கொல்ல வந்த இடத்தில், தன் தங்கையின் உயிரை காப்பாற்றிவிட்டு சென்ற வருணின் மனிதாபிமானத்தை நினைத்து பெருமைப்படுகிறார் ஜீவா. அவரைத் தேடி சென்னைக்கு வரும் ஜீவா, ரவுடிகளால் கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த வருணை காப்பாற்றுகிறார். அத்துடன் வருணை கொல்ல வந்தவர்களை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இறுதியில் வருணை கொல்ல வந்தவர்களை ஜீவா கண்டுபிடித்தாரா?, இந்த கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜீவா, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் நடிப்பில் அசத்தி இருக்கிறார். வழக்கமான ஜீவாவை இதில் பார்க்க முடியவில்லை. தங்கை மீது பாசம் காட்டுவது, நட்புக்கு மரியாதை கொடுப்பது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். நாயகியாக வரும் ரியா சுமன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் சதீஷ்.

ரவுடியாக மிரட்டி இருக்கிறார் வருண். படத்திற்கு படம் நடிப்பில் முன்னேற்றம் காண்பித்து வருகிறார். ரவுடிக்கு உண்டான தோற்றம், உடலமைப்பு என மல்லி கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார். மற்றொரு வில்லனாக ஒயிட் காலர் கிரிமினலாக வரும் நவ்தீப் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.

அண்ணன்-தங்கை பாசம், மற்றும் நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரத்ன சிவா. ஆண்கள் மட்டும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பெண்களும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரத்ன சிவா. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசனையுடன் காட்சிகளை அமைத்திருக்கிறார். குறிப்பாக, கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். கிராமத்து அழகையும், நகரத்து அழகையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறது பிரசன்னா குமாரின் கேமரா.

மொத்தத்தில் ‘சீறு’ தாறுமாறு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!