டகால்டி – விமர்சனம்

நடிகர் சந்தானம்
நடிகை ரித்திகா சென்
இயக்குனர் விஜய் ஆனந்த்
இசை விஜய் நரேன்
ஓளிப்பதிவு தீபக் குமார்

மும்பையில் சின்ன திருட்டு செய்து வருகிறார் நாயகன் சந்தானம். இந்நிலையில், தொழிலதிபராக இருக்கும் ஒருவர், தனக்கு தோன்றிய ஒரு பெண் உருவத்தை வரைந்து, அந்த பெண்ணை எங்கு இருந்தாலும் கொண்டு வர சொல்லி ஊரில் இருக்கும் ரவுடிகளுக்கு உத்தரவிடுகிறார்.

அந்த பெண்ணின் புகைப்படம் பெரிய ரவுடியாக இருக்கும் ராதாரவியிடம் வருகிறது. ஒரு பிரச்சனையில் ராதாரவி, சந்தானத்தை கொல்ல நினைக்கிறார். அப்போது இதிலிருந்து தப்பிக்க ராதாரவியிடம் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் எனக்கு தெரியும் என்று சந்தானம் கூறுகிறார்.

இந்த பெண்ணை குறிப்பிட்ட நாளில் என்னிடம் ஒப்படைத்தால் உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன். மேலும் பணம் தருவதாகவும் ராதாரவி கூறுகிறார். இதையேற்ற சந்தானம், தெரியாத பெண்ணை கண்டுபிடித்தாரா? ராதாரவியிடம் ஒப்படைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். டைமிங் காமெடி, ஒன் லைன் காமெடியென கலகலப்பூட்டி இருக்கிறார். முழு படத்தையும் தாங்கி செல்கிறார் சந்தானம். இவருடன் கூட்டணி அமைத்திருக்கும் யோகிபாபுவின் காமெடியும் பெரியளவிற்கு கைகொடுத்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சென், கொடுத்த வேலையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாக செய்திருக்கிறார். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நாயகி ரித்திகாவை, ஏமாற்றி அழைத்து வரும் காட்சி ரசிக்க வைக்கிறது. அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராதாரவி.

வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் விஜய் ஆனந்த், திரைக்கதையில் இன்னும் காமெடி காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். சந்தானம் – யோகி பாபு கூட்டணியை சிறப்பாக கையாண்டிருக்கிறார். தீபக்குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய் நரேனின் இசையும், பின்னணி இசையையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘டகால்டி’ காமெடி கலாட்டா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!