ஐடி ஊழியர்களுக்கு திருக்குறள் சொல்ல வரும் ஹர்பஜன் சிங்

பிளாக் ஷீப் குழுவினர் தயாரிக்கும் வலைத் தொடரில் ஐடி ஊழியர்களுக்கு திருக்குறள் சொல்லும் திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் நடிக்க இருக்கிறார்.

தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

பிளாக் ஷீப் குழு புதிதாக 6 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

அறிவிப்புகளில் ஒன்று, சிஎஸ்கே அணியில் சுழர்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை DUDE விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 10 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. தற்போதுள்ள இளைய தலைமுறைகள், குறிப்பாக ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை திருக்குறள் வாயிலாக ஹர்பஜன் சிங், அவரது ஸ்டைலில் சொல்ல இருக்கிறார். இந்த வலைத் தொடருக்கு திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அதுபோல், ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. 12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.

இதைத்தவிர, பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள், பிளாக் ஷீப் வேல்யூ, பிளாக் ஷீப் F3 (FACES FOR THE FUTURE), பிளாக் ஷீப் ரீவேம்ப் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!