திருட சென்று காவலாளியாகும் இளைஞன் – வாட்ச்மேன் விமர்சனம்

நடிகர் ஜி வி பிரகாஷ்குமார்
நடிகை சம்யுக்தா ஹெக்டே
இயக்குனர் ஏ.எல். விஜய்
இசை ஜி.வி.பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு நிரவ் ஷா – சரவணன் ராமசாமி
ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் வாங்கியவர்கள் மிரட்டுகிறார்கள்.

இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் `வாட்ச்மேன்’ பரபரப்பு.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.