ருக்கு – சினிமா விமர்சனம்


நாயகி ருக்கு கிராமத்தில் ஜோசியம் பார்த்து வருகிறார். இவரை அடைய பலரும் திட்டம் போட்டு வருகிறார்கள். நாயகன் பாபு ராதாகிருஷ்ணன் மட்டும், ருக்குவை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ருக்குவோ ஆண்களை வெறுத்து வருகிறார்.

நாயகன் பாபு ராதாகிருஷ்ணன், தன்னுடைய காதலை ருக்குவிடம் கூறுகிறார். ஆனால், ருக்கு பாபு ராதா கிருஷ்ணனும் தன்னை அடைய நினைப்பதாக நினைத்து அவரையும் வெறுக்கிறார்.

ஆண்களை ருக்கு வெறுக்க காரணம் என்ன? நாயகன் பாபு ராதா கிருஷ்ணன், ருக்குவை காதல் வலையில் விழ வைத்தாரா? உண்மையிலேயே ருக்கு யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபு ராதாகிருஷ்ணன், சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ருக்கு மீது காதல் வயப்படுவது, அவருக்காக ஏங்குவது என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். இவரே இப்படத்தை இயக்கி இருக்கிறார். தனிமைப் படுத்தப்பட்ட பெண், சமூகத்தில் எப்படி சித்தரிக்கப்படுகிறார் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார். இதில் காதல், சண்டை, காமெடி என கமர்ஷியல் படத்திற்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு மட்டுமே கைக்கொடுத்திருக்கிறது. காட்சிக்கும், அவர்கள் பேசுவதற்கு ஒத்துப் போகவில்லை.

நாயகியாக நடித்திருக்கும் ருக்குவை சுற்றியே படம் நகர்கிறது. துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். ஆண்களை கண்டால் வெறுப்பது, தன்னை அடைய நினைப்பவர்களிடம் இருந்து சாமார்த்தியமாக தப்பிப்பது, அவர்களுக்கு பதிலடி கொடுப்பது என திறமையை நிருபித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், மனதில் அதிகமாக பதியவில்லை.

பி.எம்.கபூரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மணி பிரசாந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு மட்டுமே ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘ருக்கு’ சுவாரஸ்யம் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#