மேல்நாட்டு மருமகன் – சினிமா விமர்சனம்


ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டு மாப்பிள்ளையாக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் நாயகன் ராஜ்கமல். இவரது இந்த கனவைப் பற்றி தான் ஊரே பேசினாலும் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்காமல், உள்ளூர் கைஃட்டாக தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் நாயகி ஆண்ட்ரியானாவுக்கு ஊர் சுற்றிக் காட்டும் வாய்ப்பு ராஜ் கமலுக்கு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் எப்படியாவது மேல்நாட்டு மருமகனாக வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? ராஜ்கமலின் ஆசை நிறைவேறியதா? ஆண்ட்ரியானாவை கரம்பிடித்தாரா? மேல்நாட்டு மருமகனானாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

ஒரு சுற்றுலா கைஃயிடாக ராஜ்கமல், கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வெளிநாட்டு பெண்ணாக வரும் ஆண்ட்ரியானாவுக்கு மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. லொள்ளு சபா மனோகர், முத்துகாளை உள்ளிட்ட மற்ற உதவி கதாபாத்திரங்கள் படத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கின்றனர்.


வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு வாழும் நாயகனின் கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.எஸ். படத்தில் அப்படி என்ன தான் இருக்கு என்று பார்த்தால் ரசிக்கும்படியாகவோ, சிரிக்கும்படியாகவோ அல்லது பொதுபோக்குக்கு உண்டான காட்சிகளை ஒரு சில இடங்களில் மட்டுமே வைத்துவிட்டு படத்தின் திரைக்கதையை இழு இழு என்று இழுத்திருக்கிறார். குறிப்பாக நாயகி ஆண்ட்ரியானாவை, இவர் தான் நாயகி என்று நம்ப வைக்க ரொம்பவே போராடியிருக்கிறார்கள். இருந்தும் அது எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் முழுக்க ஒரே மாதிரி வந்து போஃர் அடிக்க வைக்கிறார்.

வி.கிஷோர் குமார் இசையில் இசை சுமார் ரகம் தான். பாடல்களும் தேவையில்லாத இடத்தில் வந்து செல்கிறது. கே.கவுதம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் `மேல்நாட்டு மருமகன்’ கெத்தாக இல்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!