அலைபேசி – சினிமா விமர்சனம்


சென்னையில் கட்டுமான பொறியாளராக இருக்கும் நாயகன் அகில், தாய், தந்தை இல்லாமல் மாமா சிங்கம் புலியுடன் வாழ்ந்து வருகிறார். நாயகி அனு கிருஷ்ணா, இன்சுரன்ஸ் பாலிசி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும் அகிலுக்கு, இன்சுரன்ஸ் பாலிசி போட சொல்லி நாயகி அனு கிருஷ்ணா போன் செய்கிறார். வேலை பளு காரணமாக அனு கிருஷ்ணாவை திட்டி விடுகிறார் அகில். பின்னர் மனசு கேட்காமல் அதே நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், அனு போனை எடுக்கவில்லை.

மறுநாள் அகிலுக்கு போன் செய்து பேசுகிறார் அனு கிருஷ்ணா. கோபத்தில் திட்டிவிட்டதாகவும் எனக்கு ஏற்கனவே 2 இன்சுரன்ஸ் இருப்பதாகவும் கூறுகிறார் அகில். பின்னர் தன்னுடைய நண்பருக்கு அனு கிருஷ்ணாவை வைத்து இன்சுரன்ஸ் பாலிசி போடுகிறார்.

தன்னுடைய வேலை கைவிட்டு போகும் நிலையில், அனு கிருஷ்ணாவிற்கு இன்சுரன்ஸ் பாலிசி கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். இதிலிருந்து இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்கிறார்கள். ஆனால், ஒரு சில காரணங்களால், இவர்களின் சந்திப்பு நடக்காமல் போகிறது. பின்னர், மீண்டும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சனையில் அகில் சிக்க, போலீஸ் அவரை கைது செய்து விடுகிறார்கள்.

இந்த சமயத்தில் அனுகிருஷ்ணாவிற்கு மாமா மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அனுகிருஷ்ணாவிடம், அகிலை நம்பினால் பலன் இல்லை என்று தோழிகள் கூறுகிறார்கள். இதனால், மாமா மகனை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.

ஜெயில் இருந்து வரும் வீட்டிற்கு செல்லும் அகிலுக்கு அனுகிருஷ்ணாவின் திருமண அழைப்பிதழ் கிடைக்கிறது. வருத்தத்தில் இருக்கும் அகிலிடம், அந்த பெண் உனக்காக பிறந்தவள். உண்மையான காதல் தோற்காது என்று சிங்கம்புலி கூற, அனுகிருஷ்ணாவை தேடி பயணிக்கிறார்.

இறுதியில் அனுகிருஷ்ணாவை அகில் கரம் பிடித்தாரா? திருமணம் வரைக்கும் சென்ற அனுகிருஷ்ணா மனம் மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகன் அகில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலுக்காக ஏங்குவது, அனுகிருஷ்ணாவை விட்டு விடக்கூடாது என்று நினைக்கும் போதும், பிரச்சனையில் சிக்கும் போதும் நடிப்பில் முதிர்ச்சி. நாயகியாக நடித்திருக்கும் அனுகிருஷ்ணா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாமா மகனா, காதலன் அகிலா என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து மனதை கவர்ந்திருக்கிறார் அனுகிருஷ்ணா. படம் முழுக்க அகிலுடன் பயணித்திருக்கிறார் சிங்கம் புலி. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

போன் மூலமாக வரும் காதலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் முரளி பாரதி. ஏற்கனவே இதுபோல் கதையம்சம் கொண்ட படம் வந்திருப்பதால், படத்தை கூடுதலாக ரசிக்க முடியவில்லை. ஆனால், திரைக்கதையில் வித்தியாசம் காண்பிக்க முயற்சித்திருக்கிறார். போன் மூலமாகவே காதலித்து இருவரும் நேரில் சந்திக்காமலே திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார். பழைய கதை என்றாலும் ஒரு சில காட்சிகளில் புதுமை சேர்த்திருக்கிறார்.

செல்வதாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கவனம் செலுத்தி இருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘அலைபேசி’ பழையது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!