காத்திருப்போர் பட்டியல் – சினிமா விமர்சனம்


பாண்டிச்சேரியில் நண்பருடன் தங்கியிருக்கும் நாயகன் சச்சின் மணி, வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இந்த நிலையில் நாயகனுக்கு போன் செய்யும் நந்திதா, அவரது கம்பெனியில் முதலீடு செய்தால் நிறைய இலாபம் கிடைக்கும் என்று கூறுகிறார். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நந்திதாவிடம் பேசும் சச்சின் பொழுதுபோக்கிற்காகவே பேசுவதாக கூறுகிறார்.

இதனால் கடுப்பாகும் நந்திதா, சச்சினை பழிவாங்க முடிவு செய்து, சச்சின் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்று அந்த வீட்டின் உரிமையாளரிடம் சச்சின் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக செல்கிறாள். இந்நிலையில், நந்திதாவை சந்திக்கும் சச்சினுக்கு அவள் மீது காதல் வர, தனது காதலையும் நந்திதாவிடம் கூறுகிறார்.

முதலில் சச்சினின் காதலை பொருட்படுத்தாத நந்திதா, சச்சினின் தொடர் தொல்லையால் காதல் வயப்படுகிறார். நந்திதாவிடம் தான் பெரிய வேலையில் இருப்பதாகவும், நிறைய சம்பளம் வாங்குவதாகவும் சச்சின் பொய் கூறுகிறார். ஒரு கட்டத்தில் சச்சின் சொன்னது பொய் என நந்திதாவுக்கு தெரியவருகிறது.


இதையடுத்து தனது காதலுக்காக வேலை தேடும் சச்சின், நந்திதாவின் தந்தை சித்ரா லட்சுமணன் நடத்தி வரும் கம்பெனிக்கு செல்கிறார். அவருக்கு வேலை தர முடியாது என்று சித்ரா லட்சமணன் கூற, சம்பளம் இல்லாமல் தான் வேலைக்கு வருவதாகவும், தன்னை வேலைக்கு எடுத்தால் அவருக்கு தான் சம்பளம் கொடுப்பதாகவும் கூறுகிறார்.

கடைசியில் தனது பெண்ணை திருமணம் செய்ய தன்னிடமே வேலை வாங்கிய சச்சினை நிராகரிக்கும் சித்ரா லட்சுமணன், நந்திதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்கிறார். அந்த திருமணத்தை நிறுத்த சச்சின் செல்லும்போது, கண்டிப்பான போலீஸ் அதிகாரியான அருள்தாசிடம் சிக்கிக் கொள்கிறார்.

கடைசியில், அருள்தாசிடம் இருந்து சச்சின் தப்பித்தாரா? நந்திதாவின் திருமணத்தை நிறுத்தினாரா? நந்திதாவை கரம் பிடித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சச்சின் மணி தனது முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படம் என்பது தெரியாதது போல அவரது நடிப்பு சிறப்பாக வந்திருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நந்திதா இந்த படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அழகான புன்சிரிப்புடன் அவரது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார்.


அருள்தாஸ், மனோபாலா, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், அப்புக்குட்டி, செண்ட்ராயன், அருண்ராஜா காமராஜ் என அனைவருமே காமெடிக்கு பெரும்பங்கு வகித்துள்ளனர். அனைவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளனர்.

வழக்கமான காதல் கதையை, வித்தியாசமான கோணத்தில் ரசிக்கும்படியான காமெடியுடன் இயக்கியிருக்கிறார் பாலையா டி.ராஜசேகர். திரைக்கதையை காதல் மட்டுமின்றி, எதார்த்தமான காமெடியுடன் உருவாக்கியிருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ரசிக்கும்படியாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.

சீன் ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. எம்.சுகுமார் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக ரசிக்கும்படியாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `காத்திருப்போர் பட்டியல்’ பொழுதுபோக்கு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!