வாசுகி – சினிமா விமர்சனம்


தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணிபுரிந்து வரும் மம்முட்டி, தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். கதகளி நடனத்தில் தேர்ச்சி பெற்றவரான நயன்தாரா, அனைத்து விஷயங்களிலும் பயப்படுகிறார். அந்த பயத்தால் பலரிடம் கோபப்பட்டு திட்டி விடும் சுபாவம் கொண்டவர்.

இந்நிலையில், ஒருநாள் துணி காயப்போட மாடிக்கு செல்லும் நயன்தாராவை, அதே குடியிறுப்பில் தங்கி இருக்கும் இளைஞர்கள் இருவர் மற்றும் இஸ்திரி வேலை செய்யும் செண்ராயன் சேர்ந்து கற்பழித்து விடுகின்றனர். மேலும் அதனை ஒரு வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

தனக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நயன்தாரா, தனது குடும்பத்துடன் முன்பு போல மகிழ்ச்சியாக வாழ முடியாமல் தவிக்கிறாள். இந்த விஷயத்தில் இருந்து மீள முடியாமல், தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப முயற்சி செய்து, மீண்டும் கதகளி நடனத்தில் முழு ஈடுபடுடன் இருக்க முயல்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் நயன்தாராவின் கதகளி நடனம் அந்த ஊரில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பிடித்துப் போக, எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளச் சொல்கிறார்.


இதையடுத்து தனக்கு இழைத்த கொடுமையை அந்த போலீஸிடம் கூறும் நயன்தாரா, அவர்களை பழிவாங்க தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். பின்னர் மூன்று பேரையும் திட்டம் போட்டு வித்தியாசமான முறையில் கொலை செய்கிறார்.

இந்த கொலைகளை செய்ய பின்னணியில் இருந்து நயன்தாராவுக்கு ஒருவர் உதவி வருகிறார். அவர் யார்? அவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிய வந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? கடைசியில் மம்முட்டிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மம்முட்டி ஒரு கணவனாக, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி சிறப்பாக நடத்திருக்கிறார். இயல்பான, கலகலப்பான நடிப்பால் வந்து கவர்கிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக, மனைவியாக, அனைத்திற்கும் பயப்பட்டு, கோபப்படும் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா. படம் முழுக்க பயத்துடனேயே வலம் வரும் நயன்தாராவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.


குடும்ப பெண்கள், அவர்களது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை த்ரில்லர் கலந்த குடும்ப கதையாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஏ.கே.சஜன். படத்தின் திரைக்கதையும், அதை கையாண்ட விதமும் சிறப்பு. அதற்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

ரோபி வர்கீஸ் ராஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.

மொத்தத்தில் `வாசுகி’ தைரியமானவள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி