மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் துயரத்துடன் கூடிய வாழ்க்கை..!! சினிமாவை விட நிஜத்திலும் நடிப்பு..!!


கடந்த 20-ம் திகதி துபாயில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க ஶ்ரீதேவி அவரின் மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூர் ஆகியோர் சென்றனர். கடந்த 24- ம் திகதிதி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற தகவல் வெளியானது. இந்திய திரைத்துறையே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதனைத் தொடர்ந்து துபாயின் சட்ட திட்டங்களின்படி ஸ்ரீதேவியின் உடல் தடயவியல் சோதனைக்கும், உடற்கூராய்வுக்கும் அனுப்பப்பட்டு இந்தியாவிற்கு எடுத்து வரப்பட்டு இறுதிக்கிரியைகள் முடிந்துள்ளன.

இது குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளதாவது, “ஶ்ரீதேவி மரணச் செய்தி நமக்குக் கற்றுத் தந்த பாடம் ஒன்றுதான். இந்த வாழ்க்கையும் மரணமும் எவ்வளவு இரக்கமற்றது, இலகுவானது, மர்மத்துக்குரியது என்பனதான். இன்று அவர் நம்மிடையே இல்லை. இருப்பினும், மற்றவர்களைப்போல அவரது இழப்பைப் பற்றியோ, அழகிய தோற்றத்தையோ, திறமையையோ தாண்டி நான் அவரைப் பற்றி சொல்ல அதிமாகவே உள்ளது.


ஒருவரது வாழ்க்கை வெளியிலிருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாகவும், ஆசைக்குரியதாகவும் தெரியலாம். ஆனால், அதன் மறுமுகம் வேதனையின் உருவமாக கூட இருக்கலாம். இதற்கு ஶ்ரீதேவியின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
கண்கவர் தோற்றம், அழகிய குடும்பம், இரண்டு மகள்கள் என மிகப் பகட்டான ஒரு வாழ்க்கையாகவே அவரது வாழ்க்கை நம்மில் பலருக்கும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அவர் இத்தகைய சந்தோஷமான நிலையில்தான் வாழ்ந்தாரா?


ஶ்ரீதேவியை எனது முதல் படமான ‘கஷ்னக்ஷ்னம்’ படத்திலிருந்து எனக்குத் தெரியும். தனது தந்தை இறக்கும்வரை ஒரு வானம்பாடிப் பறவையாக உயரே பறந்துகொண்டிருந்தார். தந்தையின் மறைவுக்குப் பின் அம்மாவின் அளவுகடந்த பாதுகாப்பில் சற்றே நம்பிக்கையில்லாமல், இன்முகம் இறுக்கம் கொள்ள தன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் அடைத்துக்கொண்டார்.

அன்றைய காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் கறுப்புப் பணத்தைதான் சம்பளமாகத் தருவார்கள். வருமான வரித்துறை சோதனையைத் தவிர்க்க, தனது நண்பர்கள் பலரிடம் பணத்தைப் பாதுகாக்க கொடுத்துவந்தார் ஸ்ரீதேவியின் அப்பா. காலம் அவர் கணக்கை முடிக்க, பணத்தை வாங்கிய பலர் திருப்பித் தரவில்லை. ஶ்ரீதேவிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.


இதற்குக் கூடுதலாக தாயார் ராஜேஸ்வரி தவறான சொத்துகளில் முதலீடு செய்து பல இடங்களில் ஏமாற்றமடைந்து வந்தார். கையில் பணம் இல்லை, ஆறுதல் சொல்லவும் ஆளில்லை என்ற நேரத்தில்தான், போனி கபூர் ஶ்ரீதேவி வாழ்க்கையில் வருகிறார். போனி கபூரும் அப்போது பெரிய கடனில் இருந்தார். அவரிடம் இருந்ததெல்லாம் ஶ்ரீதேவி சாய்ந்து அழ தோள்கள் மட்டுமே.

அமெரிக்காவில் செய்யப்பட்ட தவறான மூளை அறுவை சிகிச்சையினால் ஶ்ரீதேவியின் தாயார் புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் காலமானார். இறக்கும் முன் அனைத்துச் சொத்தையும் ஶ்ரீதேவி பெயருக்கு அவரது தாயார் மாற்றி எழுதிவிட, காதல் கணவருடன் இருந்த ஶ்ரீதேவியின் தங்கை ஶ்ரீலதா, ஶ்ரீதேவி மீது வழக்கு தொடர்ந்து, ‘தாயார் புத்தி ஸ்வாதீனம் இல்லாதவர்’ எனக்கூறி சொத்தில் பாதியைப் பிரித்துக்கொண்டார்.


இந்திய சினிமாவின் ஈடில்லா நாயகி, போனீ கபூரைத் தவிர ஒன்றுமில்லாமல் இருந்தார். போனி கபூர் அவரின் முதல் மனைவி மோனாவைப் பிரிவதற்குக் காரணம் ஶ்ரீதேவிதான் என்று எண்ணியவர், ஶ்ரீதேவியை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் லாபியில் வைத்து வயிற்றிலேயே பலமாகத் தாக்கி பழி தீர்த்துக்கொண்டார்.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தைத் தவிர அவர் சமீபத்தில் பெற்ற வேறு பெரிய சந்தோஷம் இல்லை. போனியின் கடன், எதிர்காலத்தைப் பற்றிய கவலை, குடும்ப வாழ்க்கையில் இருந்த சொல்லில் அடங்காத பிரச்னைகள் பல.
சிறுவயதில் எல்லோரும் வளர்வதுபோல் அவர் ஓர் அமைதியான சூழலில் வளரவில்லை. பெயர், புகழ் என ஓர் அசாதாரண சூழ்நிலையிலேயே வளர்ந்தார்.அவரது மனதில் என்ன ஓடுகிறது என்பதை யாராலும் சொல்லமுடியாது.

பெரும்பாலும் தான் எப்படித் தெரிகிறோம் என்ற கவலையே அவரை ஆட்டிப்படைக்க தொடங்கியது. அவர் ஓர் அழகியாகவே பார்க்கப்பட்டு வந்தார். எல்லாக் கதாநாயகிகளுக்கும் ஏற்படும் மூப்பு இவரை சற்றே பாதித்தது. பல வருடங்களாக தன்னை இளமையாகக் காட்டிக்கொள்ள சிகிச்சைகள் செய்து வந்தார்.


தனது மனதில் ஓடுகின்றவை யாவும், யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, தன்னைச் சுற்றி மனரீதியாக ஒரு வேலியைக் கட்டிக்கொண்டார். இப்படி ஒருவித இருக்கத்தோடே இருந்தது ஶ்ரீதேவியின் குற்றம் இல்லை. சிறுவயது முதலேயே புகழை மட்டும் வைத்துக்கொண்டு வளர்ந்த ஶ்ரீதேவி, சாதாரண சூழ்நிலையில் வாழமுடியாமல் போனதும் ஒரு காரணம்.

ஒரு ரசிகனாக ஶ்ரீதேவி எனும் நடிகையைத் திரையில் பார்த்து ரசித்திருந்தாலும், அருகில் அவரைத் தெரிந்துகொண்டபிறகு நிஜ வாழ்விலும் அவர் தனது நடிப்பைத் தொடரவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அவரை அவரது பெற்றோர், கணவர், உறவினர், குழந்தைகள் எனப் பலராலும் இயக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.


சமூகத்திலோ, சினிமாவிலோ அவரின் மகள்கள், அவருக்குக் கிடைத்த வரவேற்புடன் வரவேற்கப்படுவார்களா? என்ற ஐயமும் ஶ்ரீதேவிக்கு இருந்தது. பெண்ணின் உடலுக்குள் அடைபட்ட ‘குழந்தை’ ஶ்ரீதேவி. வெகுளியான ஶ்ரீதேவி தனக்குச் சிறுவயதிலிருந்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் எதிலும் சிறு சந்தேகத்துடனேயே காணப்படுவார்.

இது அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருக்கும் விஷயங்களால் அவர் கண்களில் ஏதோ ஒரு வலி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மாரடைப்பால் குளியல் தொட்டியில் முழ்கி இறந்திருக்கிறார் எனக் கூறினாலும், அவரது மருந்துண்ணும் பழக்க வழக்கங்களும் அவரது இறப்பில் பெரும் பங்கு வகித்திருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி