மெர்லின் – சினிமா விமர்சனம்


படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் நாயகன் விஷ்ணுபிரியன். அதேபோல் நாயகனாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் லொள்ளு சபா ஜீவா. விஷ்ணுபிரியன், ஜீவா, முருகதாஸ் என நண்பர்கள் மூன்று பேரும் ஒன்றாக தங்கி வருகின்றனர். இந்நிலையில், அட்டகத்தி தினேஷை சந்தித்து, கதை சொல்கிறார் விஷ்ணுபிரியன். தினேஷுக்கும் விஷ்ணுபிரியனின் ஒரு வரிக்கதை பிடித்துப் போக, முழு கதையை தயார் செய்யும்படி அனுப்பி விடுகிறார்.

இதையடுத்து அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்குகிறார் விஷ்ணுபிரியன். ஆனால் அவரால் கதையை தொடர்ந்து எழுத முடியவில்லை. ஜீவா, முருகதாஸ், ஆதவன் என நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி கும்மாளம் அடிப்பதால் கதையை உருவாக்க முடியாமல் தவிக்கிறார். இதையடுத்து அவர்களை அங்கிருந்து கிளப்ப, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் பேய் இருப்பதாக கூறுகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

இதற்கு முன்பு இந்த வீட்டில் வசித்தவர்கள் இந்த வீட்டிலேயே தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக அவர்கள் வீட்டிற்கு அருகில் தங்கியிருக்கும் பாட்டி ஒருவர் கூறியதாக கிளப்பி விடுகிறார். இந்த உண்மையை வெளியே சொன்னால் பாட்டியை அந்த பேய் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாக அந்த பாட்டி கூறியதாக விஷ்ணுபிரியன் கூறுகிறார்.

இந்நிலையில், விஷ்ணுபிரியன் கூறும் கதை நிஜத்தில் நடக்க ஆரம்பிக்கிறது. அவர் கதை சொன்ன அடுத்த நாளே அந்த பாட்டியும் இறந்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு அமானுஷ்யம் தன்னையே பயமுறுத்துவதாக விஷ்ணுபிரியன் உணர்கிறார்.


கடைசியில் அவர் கதையாக சொல்வது நிஜத்தில் நடப்பது எப்படி? அதன் பின்னணியில் என்ன நடந்தது? உண்மையிலேயே அந்த வீட்டில் பேய் இருக்கிறதா? விஷ்ணுபிரியன் தனது ஆசைப்படி இயக்குநர் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஷ்ணுபிரியன் கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி கவர முயற்சித்திருக்கிறார். அஸ்வினி சந்திரசேகருக்கு காட்சிகள் குறைவு என்றாலும், வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். ஜீவா, முருகதாஸ் அவ்வப்போது காமெடிகளில் சிரிக்க வைத்தாலும், காமெடி பெரிதாக எடுபடவில்லை. அட்டகத்தி தினேஷ் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். தங்கர்பச்சான், மனோபாலா, களஞ்சியம், தேவராஜ், ஆதவன், வினோத், ஆதித்யா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றன.

இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் நாயகன் கட்டிவிடும் புரளி, அவனுக்கே எதிராக கிளம்புவதையும், அதில் அவன் சிக்கிக் கொள்வதையும், அதனை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் படமாக உருவாக்கியிருக்கிறார் வி.கீரா. முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதி சற்றே விறுவிறுப்பாக செல்கிறது. அதேநேரத்தில் திடீர் திடீரென வரும் திரைக்கதை மாற்றங்கள், குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கின்றன.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு வலுசேர்த்திருக்கிறது. முத்துக்குமரன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.

மொத்தத்தில் `மெர்லின்’ குழப்புகிறாள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி