கூட்டாளி – சினிமா விமர்சனம்


நாயகன் சதீஷ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் கார் கேரஜில் தங்கி வருகிறார். சேட்டிடம் டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வரும் வேலையை பார்க்கும் சதீஷ்விற்கும், அவருடைய நண்பர்களுக்கும் அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கும் அருள்தாஸ் பக்க பலமாக இருக்கிறார்.

இப்படி கார்களை தூக்கி வரும் சதீஷ், அரசியல்வாதி ஒருவரின் காரையும் தூக்கி விடுகிறார். இதை அவமானமாக கருதும் அந்த அரசியல்வாதி, சதீஷ்வை கொலை செய்ய நினைக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

இந்நிலையில், பாண்டிச்சேரியில் இருந்து கார் ஒன்றை எடுத்து வரும் சதீஷ், எதிர்பாராதவிதமாக நாயகி கிரிஷா க்ரூப் மீது மோதி விட்டு சென்று விடுகிறார். சென்னை வந்தும், நாயகி கிரிஷாவிற்கு என்ன ஆனது என்று நினைத்து வருந்துகிறார். இந்நிலையில், சென்னையில் கிரிஷா க்ரூப்வை சந்திக்கும் சதீஷ் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரது மன்னிப்பை ஏற்க மறுக்கிறார் கிரிஷா.

பின்னர், சதீஷ்வின் நல்ல குணங்களை அறிந்து, அவர் மீது காதல் வயப்படுகிறார். இவர்களது காதல் கிரிஷாவின் அப்பாவான போலீஸ் அதிகாரி கல்யாண் மாஸ்டருக்கு தெரிய வந்து, இந்த காதலை பிரிக்க நினைக்கிறார்.

இறுதியில் சதீஷ், கிரிஷாவுடன் இணைந்தாரா? அரசியல்வாதி சதீஷ்வை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.


படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ் ஆக்‌ஷன், காதல், காட்சிகளில் திறமையாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து காரை தூக்குவது என ஒரு சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகி கிரிஷா க்ரூப், சதீஷ் மீது ஆசைப்படுவது, பிரச்சனையில் சிக்கும் போது, அவருக்காக ஏங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சேட், அரசியல்வாதி, அருள்தாஸ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் கல்யாண் மாஸ்டர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.

டியூ கட்டாத கார்களை தூக்குவது, அதன் மூலம் பிரச்சனை வருவது என கதை நகர்ந்தாலும், படத்தில் வித்தியாசமக பார்க்க முடியவில்லை. ஏற்கனவே பார்த்த காட்சிகள், யூகிக்கும் காட்சிகள் என அடுத்தடுத்து வந்து படத்திற்கு தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

பிரிட்டோ மைக்கேல் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சுரேஷ் நட்ராஜனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘கூட்டாளி’ கூட்டம் குறைவு.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி