போர் தொழில் – விமர்சனம்

நாயகன் அசோக் செல்வன் குடும்ப ஆசைக்காக விருப்பம் இல்லாமல் போலீஸ் அதிகாரி ஆகிறார். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இந்நிலையில் திருச்சியில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யபடுகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வசம் செல்கிறது. சரத்குமார் தலைமையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு உதவியாக அசோக் செல்வன் செல்கிறார். இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. இறுதியில் பெண்களை கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் யார்? எதற்காக கொலை செய்கிறான்? சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் கொலைகாரனை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். சரத்குமாருக்கு வழக்கமான போலீஸ் அதிகாரி கேரக்டர் என்றாலும் இந்தப்படத்தில் இறுக்கமான காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு அதிகம் பேசுகிறது. வெகுளியான போலீஸ் அதிகாரியாக கவனம் ஈர்த்துள்ளார் அசோக் செல்வன். சின்ன சின்ன அசைவுகள், முகபாவனைகளில் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், ரொமான்ஸ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த அசோக் செல்வன், தற்போது வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் நாயகி நிகிலா விமல். கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா. படத்தில் காதல், ரொமான்ஸ், பாடல், சண்டை காட்சிகள் இல்லாததது சிறப்பு. படிப்பறிவு உள்ள அசோக் செல்வன், அனுபவ அறிவுள்ள சரத்குமார் இருவரும் தங்கள் பாணியில் இந்த வழக்கை விசாரிக்கும் விதம் அதிக சுவாரஸ்யம். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் இயக்கி இருப்பதற்கு பாராட்டுகள். கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவின் மூலம் படத்தை மெருகேற்றியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் போர் தொழில் விறுவிறுப்பான போர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!