ஜடா – விமர்சனம்

நடிகர் கதிர்
நடிகை ரோஷினி பிரகாஷ்
இயக்குனர் குமரன்
இசை சாம் சி.எஸ்
ஓளிப்பதிவு சூர்யா

சென்னையில் கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் நாயகன் கதிர். இவரை எப்படியாவது தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்று பயிற்சியாளர் முயற்சி செய்கிறார். இந்நிலையில், 10 வருடத்திற்குப் பிறகு சென்னையில் நடைபெற இருக்கும் செவன்ஸ் என்னும் விதிகள் இல்லாமல் விளையாடும் கால்பந்தாட்டத்தில் விளையாட வேண்டும் என்று கதிர் ஆசைபடுகிறார்.

விதிகள் இல்லாததால் கை, கால்கள் இழக்க நேரிடும் என்று பயிற்சியாளர் கூறியும் கதிர் விளையாட வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார். ஒரு கட்டத்தில் செவன்ஸ் போட்டியில் கதிர் அணி விளையாடி வரும் நிலையில், ஒரு பிரச்சனையில் லோக்கல் போலீஸ், சென்னையில் போட்டி நடத்த அனுமதி மறுக்கிறது.

இதனால், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி சாத்தான் குளத்தில் நடத்த முடிவு செய்கிறார்கள். சென்னையில் இருந்து சாத்தான் குளம் செல்லும் கதிர் மற்றும் நண்பர்களுக்கு மர்மமான சம்பவங்கள் நடக்கிறது.

இறுதியில் கதிர் மற்றும் நண்பர்களுக்கு ஏற்பட்ட மர்மமான சம்பவங்கள் என்ன? கால் பந்தாட்ட போட்டியில் கதிர் அணி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர், மைதானத்தில் விளையாடும் போதும், காதல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ரோஷினி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடியில் கலக்கி இருக்கிறார் யோகி பாபு. ஒரே கிக்கில் அனைவருடைய கவனத்தையும் தன் வசமாக்கி இருக்கிறார்.

தன்னுடைய பார்வையால் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். அறிமுக காட்சியிலும், மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சென்டிமெண்ட்டால் கவர்ந்திருக்கிறார் லிஜிஸ். கெத்தாக வந்து செல்கிறார் கிஷோர்.

கால்பந்தாட்டத்தில் செவன்ஸ் என்னும் விளையாட்டை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன். ஆனால், திரைக்கதை விளையாட்டை விட்டு சற்று விலகி சென்று படத்தை உருவாக்கி இருக்கிறார். விளையாட்டு படங்களுக்கு உண்டான அதே பாணி இந்த படத்திலும் பயணிக்கிறது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பிற்பாதியில் இவருடைய இசையுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளர் சூர்யாவும் பயமுறுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஜடா’ பார்க்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!