பியூட்டி – விமர்சனம்

அழகு என்றாலே ஆபத்து என்று நினைக்கும் நாயகன் ரிஷி, அழகான பெண்களை பார்த்தாலே வெறுப்பதோடு, தனது தந்தை ஆசைப்பட்டது போல், ஊனமுற்ற அல்லது மற்றவர்கள் திருமணம் செய்ய மறுக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இதற்கிடையே தீ விபத்தில் முகம் பாதிக்கப்பட்ட நாயகி கரீனா ஷாவை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்ளும் ரிஷி, தன் தந்தை சொன்னது போன்ற ஒரு பெண்ணுடன் தனது இல்லற வாழ்க்கையைத் தொடங்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் நேரத்தில், கரீனா பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை பழையபடி அழகுப்படுத்திக் கொள்கிறார். இதனால் கரீனாவை வெறுக்கும் ரிஷி, பழையபடி அவரின் அழகான முகத்தை அலங்கோலமாக்கி அதன் பிறகு அவரை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். ரிஷியின் இந்த விபரீதமான முயற்சியால் என்ன நடந்தது? அழகு என்றாலே ஆபத்து என்று ரிஷி நினைப்பது ஏன்? அவருடைய தந்தை இப்படி ஒரு விபரீதமான எண்ணத்தை ரிஷி மனதில் விதைத்தது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடித்திருக்கும் ரிஷி, தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கும் இவர் அப்பா கதாபாத்திரத்தை விட மகன் கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். நாயகியாக நடித்திருக்கும் கரீனா ஷா கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். சிங்கமுத்து, காயா கபூர், ஆதேஷ் பாலா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். படத்தை எழுதி இயக்கியிருக்கும் கோ.ஆனந்த் சிவா, கமர்ஷியலான படத்தை இயக்கியிருந்தாலும் அதில் நல்ல கருத்தை ரசிக்கும்படியும் மக்களை யோசிக்க வைக்கும்படியும் சொல்லியிருக்கிறார். படத்தின் முதல் பாதி சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இரண்டாம் பாதி திரைக்கதையை மிகவும் தெளிவாக இயக்கியிருக்கிறார் இயக்குனர். இலக்கியனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கும் ஆர்.தீபக் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் பியூட்டி – அழகு


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!