டாடா – விமர்சனம்

ஒரே கல்லூரியில் படித்து வரும் கவின் மற்று அபர்ணா காதலித்து வருகின்றனர். பின்னர் அந்த காதல் எல்லை மீற அபர்ணா கர்ப்பமாகிறார். இவர்களை ஏற்றுக் கொள்ளாத பெற்றோர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். பின்னர் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் இருவரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஒரு நாள் இருவரின் சண்டை முற்றிப்போக கர்ப்பிணி மனைவியை வீட்டில் விட்டு கவின் கிளம்பி விடுகிறார்.

அப்போது அபர்ணாவுக்கு பிரசவ வலி வர கவினை தொலைப்பேசியில் அழைக்கிறார். அவரின் அழைப்பை எடுக்காமல் கவின் தவிர்க்கிறார். அக்கம் பக்கத்தினரின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறக்கிறது. பின்னர் நடந்த விஷயத்தை அறிந்துக் கொண்ட கவின், அபர்ணாவை சந்திக்க மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு குழந்தையை விட்டுவிட்டு அபர்ணா பெற்றோருடன் சென்றுவிடுகிறார். இறுதியில் கவின் தனது குழந்தையை வளர்த்தாரா? பிரிந்த மனைவியுடன் கவின் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

படத்தின் நாயகன் கவின், கல்லூரி மாணவர், கணவர், தந்தை என நடிப்பின் மூலம் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சிகளில் நெகிழ வைக்கிறார். நடிப்பின் மூலம் அந்த உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்தி கைத்தட்டல் பெறுகிறார். நாயகி அபர்ணா, எதார்த்த நடிப்பை கொடுத்து பாராட்டுக்களை பெறுகிறார். வீட்டை விட்டு வெளியேறிய காதலியின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் அழவைக்கிறார். மேலும் பாக்யராஜ், ஐஸ்வர்யா, வி.டி.வி.கணேஷ், ஆகியோர் கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

சாதாரண கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தி படத்தை ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு. திரைக்கதையின் விறுவிறுப்பு படத்தை ரசிக்க உதவியுள்ளது. காதல் ஜோடியின் நெருக்கம், குடும்பம், மோதல், பிரிவு என பல உணர்வுகளை கோர்வையாக கொடுத்து அசத்தியுள்ளார். பெற்ற குழந்தையை விட்டு விட்டு தாய் பெற்றோருடன் சென்றுவிடுவது லாஜிக்கல் பிரச்சனை தோன்றுகிறது இறுதியில் இதற்கான காரணத்தை வைத்து நியாயப்படுத்தியுள்ளார் இயக்குனர். சாதரண வாழ்க்கையை அழகாக கண்முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு. பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.   மொத்தத்தில் டாடா – சிறந்த அப்பா.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!