நடிகை மீராமிதுன் மாயம்.. கண்டுபிடித்து தருமாறு தாயார் போலீசில் புகார்..

பிரபல நடிகை மீராமிதுன். இவர் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இதன் விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜரானார். போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், ‘மீராமிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்’ என்றார்.


இதைத்தொடர்ந்து மீரா மிதுனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை செயல்படுத்துவதற்காக அவரை பல இடங்களில் தேடியும் இருப்பிடத்தை அவர் அடிக்கடி மாற்றி வருவதால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் தலைமறைவாக இருக்கும் அவர் பெங்களூரில் இருப்பதாக தாகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த போது அவர் வேறு இடத்திற்கு தப்பி சென்றுவிட்டதாக கவல்துறை தெரிவித்தது.


அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அவர் செல்போன் நம்பரை மாற்றி வருவதாகவும் ஏற்கனவே வைத்திருந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் விரைவில் மீராமிதுனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று மாலை மீரா மிதுன் தாயார் ஷியாமலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் தங்களின் தொடர்பில் இல்லை. வழக்கை சந்தித்து வந்தபோதிலும், தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்தார். ஆனால் சில நாட்களாக தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு கூறியுள்ளார். தற்போது, இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!