இளையராஜா நூற்றாண்டு விழா காண வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே தனது விருப்பம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

முத்து விழா ஆண்டில், 80-வது வயதில் அடியெடுத்து வைக்கும் உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காண பிரார்த்திக்கிறேன்.

இசைஞானியின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். தாயின் தாலாட்டில் மயங்கி கண்ணுறங்கியது நான்கு ஆண்டுகள் என்றால் இந்த ஞானியின் தாளங்களில் மயங்கி கண்ணுறங்கிய காலம் நாற்பதாண்டுகளுக்கும் அதிகம். எனது மகிழ்விலும், கவலையிலும் இசையாய் இளையராஜா என்னுடன் இருப்பார்.

மனக்காயங்களுக்கு இசை மருந்து போடுவதால் அவரும் ஒரு மருத்துவர். பயணத்தில் துணை வருவதால் அவர் இனிய வழித் தோழர். எவராலும் வெறுக்க முடியாத எல்லோராலும் நேசிக்க முடிந்த மனிதர்களில் முதலாமவர் இளையராஜா. அவரது இசைச் சேவை தொடர வேண்டும்.

இந்தியாவின் 2-வது மிக உயரிய பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ள இளையராஜா, அடுத்து நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதையும், தாதா சாகேப் பால்கே விருதையும் வென்று புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்பதே எனது விருப்பம்; அது வெகுவிரைவில் நிறைவேற வேண்டும்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!