எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

நடிகர் சூர்யா
நடிகை பிரியங்கா மோகன்
இயக்குனர் பாண்டிராஜ்
இசை இமான்
ஓளிப்பதிவு ரத்னவேலு

தென்னாடு பகுதியில் வக்கீலாக இருக்கும் சூர்யா, தந்தை சத்யராஜ், தாய் சரண்யாவுடன் வாழ்ந்து வருகிறார். வடநாடு பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார் வினய். தென்னாடு, வடநாடு ஊர்களுக்கு இடையே சில ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது.

இந்நிலையில் ஊரில் சில பெண்கள் கொலை மற்றும் தற்கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க சூர்யா தீவிரம் காட்டுகிறார். இதன் பின்னணியில் வினய் இருப்பது சூர்யாவிற்கு தெரிய வருகிறது.


இறுதியில் பெண்களை வினய் கொலை செய்ய காரணம் என்ன? வினய்க்கு சூர்யா தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, காமெடி, நடனம், ரொமான்ஸ், சென்டிமென்ட், சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 


நாயகியாக வரும் பிரியங்கா மோகன் வெகுளித்தனமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். பிற்பாதியில் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார் வினய். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.


பாசமான தாய், தந்தையாக சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷனி, சூரி, புகழ் ஆகியோர் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். பிரியங்கா மோகனின் தோழியாக வரும் திவ்யா துரைசாமி யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பெண்களுக்கு நடக்கும் பாலியல் மிரட்டல்களை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ஆண்களை எப்படி வளர்க்க வேண்டும், பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பங்கள் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.


இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. ரத்தினவேலு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.


மொத்தத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ துணிச்சலான வெற்றி.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!