தந்தையின் வாழ்க்கையை படமாக்கும் தீபிகா படுகோனே

இந்தி மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, அவரது தந்தையின் வாழ்க்கையை படமாக்க இருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்த தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர் விளையாட்டு வீரரான தனது தந்தையின் வாழ்க்கை கதையை படமாக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், “1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று உலக நாடுகள் அனைத்தும் இந்திய விளையாட்டை பற்றி பேசும்படி செய்தது. ஆனால், அதற்கு முன்பே உலக நாடுகள் இந்தியாவை நோக்கும்படி செய்தவர் என் தந்தை பிரகாஷ் படுகோனே. அவர் 1981-ம் ஆண்டு பேட்மிண்டனில் உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.


83-க்கு முன்பே, உலகிலேயே பேட்மிண்டன் விளையாட்டை தனது ஆட்டத்தால் உயர்ந்த சிகரத்துக்கு கொண்டு சென்றவர் அவர். இப்போது போல வசதிகள் அப்போது எதுவும் இல்லை. கல்யாண மண்டபங்களை பேட்மிண்டன் ஸ்டேடியம் ஆக மாற்றிக்கொண்டு என் அப்பா பயிற்சி செய்தார். அவரை பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தற்போது சினிமாவில் விளையாட்டை பின்னணியாக வைத்து வரும் படங்களுக்கு நல்ல ஆதரவு உள்ளது. எனவே, என் தந்தையின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறேன்’’ என்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!