கேரளாவில் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல்

அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், அங்கு திட்டமிட்டபடி மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன. இதனிடையே ஜனவரி 5 ஆம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார். அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில், அதற்கு கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்காததால் தியேட்டர்களை திறக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை.

இதனால் கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாள முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படங்களுக்கும் கேரளாவில் வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!