சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் கானா பாலா

தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கானா பாலா, கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார்.

புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கானா பாலா (எ) பாலமுருகன் (51). கானா பாடல்கள் மூலம் பிரபலமான இவர், பிறகு தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர், சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் 6வது மண்டலம், 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர், ஏற்கனவே அந்த வார்டில் இதற்கு முன்பு 2006ம் ஆண்டு போட்டியிட்டு 2வது இடம் பிடித்தார். அதன் பிறகு 2011ம் ஆண்டு போட்டியிட்டு 2வது இடம் பிடித்தார். தற்போது 3வது முறையாக அதே வார்டில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”கடந்த 19 வருடங்களாக இந்த பகுதியில் கவுன்சிலராக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். இது நான் பிறந்து வளர்ந்த ஊர். இந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன். ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன். அதனால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார். கானா பாலாவின் அண்ணன் கபிலன் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!