நோ டைம் டு டை – விமர்சனம்

நடிகர் டேனியல் கிரேக்
நடிகை அனா டி அர்மாஸ்
இயக்குனர் கேரி ஜோஜி
இசை ஹேன்ஸ் சிம்மர்
ஓளிப்பதிவு லினஸ் சேண்ட்கிரன்

இத்தாலியில் ஜேம்ஸ் பாண்ட் தனது காதலியுடன் இருக்கும்போது, திடீரென ஸ்பெக்டர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்குகிறார்கள். தான் இருக்குமிடத்தை காதலி காட்டிக் கொடுத்ததால்தான் அந்தத் தாக்குதல் நடந்ததாகக் கருதும் ஜேம்ஸ் பாண்ட் காதலியை விட்டு பிரிகிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, எம்ஐ6ன் ஆய்வகத்தில் ‘புராஜெக்ட் ஹெர்குலிஸ்’ என்ற திட்டத்தை செயல்படுத்திவரும் அப்ருஷேவ் என்ற விஞ்ஞானி கடத்தப்படுகிறார். அந்தத் தருணத்தில் ஓய்வில் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட்டை சிஐஏ தொடர்பு கொண்டு, அந்த விஞ்ஞானியை மீட்க உதவ முடியுமா எனக் கேட்கிறது. அதே நாளில் எம்ஐ6ன் புதிய உளவாளி நோமியும் ஜேம்ஸ் பாண்ட்டை தொடர்பு கொண்டு பிரிட்டனுக்கு உதவும்படி கேட்கிறார்.

இறுதியில், புராஜெக்ட் ஹெர்குலிஸ் என்றால் என்ன? விஞ்ஞானியை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? ஜேம்ஸ் பாண்ட் விஞ்ஞானியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜேம்ஸ் பாண்ட்டாக வரும் டேனியல் கிரேக்கின் நடிப்பு பாராட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்தப் படம் அவருடைய இறுதி படம் என்பதால், தனக்கே உரிதான முரட்டுத்தனம்,

நகைச்சுவையில் நம்மை ஆட்கொள்கிறார். கதாநாயகியாக வரும் அனா டி அர்மாஸ், தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார். டேனியலுடன் இணைந்து பணிப்புரியும் காட்சிகள் வேற லெவலில் உள்ளன.
இந்த படத்தின் திரைக்கதை நம்மை ஆட்கொண்டாலும், ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கே உரிய சில அம்சங்கள் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல இடங்களில் படம் மெதுவாக செல்கிறது போன்ற உணர்வை கொடுக்கின்றது. சுவாரஸ்யமான சில காட்சிகள் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இப்படத்தில் நவீன கால கருவிகள் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தாலும், மந்தமான காட்சிகளால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இப்படத்தின் மிகப்பெரிய பின்னடைவு நீளம் தான். இரண்டு மணிநேரம் 43 நிமிடங்கள் என்பது ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே அதிக நீளம். இவ்வளவு நீளமான படத்தில் முக்கிய வில்லனான ரமி மாலெக் கொஞ்ச நேரம் மட்டும்தான் வருகிறார்.

ஹான்ஸ் சிம்மரின் இசை படத்திற்கு அதிக மதிப்பை உண்டாக்குகிறது. மேலும், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் தீம் மியூசிக்கை சரியான இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் காட்சியமைப்பு அழகியல் காட்சிகளாக அமைந்துள்ளன. சண்டை காட்சிகள் அனைத்து விசில் அடித்து கொண்டாடும் அளவிற்கு அமைந்துள்ளன.
மொத்தத்தில் ‘நோ டைம் டு டை’ சுவாரஸ்யம் குறைவு.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!