நடிகர் சங்கத் தலைவரின் அதிரடி அறிவிப்பால் கொண்டாட்டத்தில் திரையுலகினர்..!!


பட அதிபர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. புதிய படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்றும், சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

சுமுகமாக முடிந்துள்ளது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் திரைப்படத்துறையை சீரமைக்கவும், முறைப்படுத்தவும் 48 நாட்களாக புதிய படங்களை வெளியிடாமல் இருந்தோம். 30 நாட்கள் படப்பிடிப்புகளையும் நிறுத்திவைத்தோம். இந்த போராட்டம் பலனை அளித்துள்ளது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்துள்ளது.

டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினோம். மொத்தம் உள்ள 1,112 தியேட்டர்களில் 50 திரையரங்குகள் இ-சினிமா புரொஜெக்டர் வசதி பெற்றுள்ளன. இந்த இ-சினிமா தியேட்டர்களில் புரொஜெக்டர் சேவை கட்டணம் 50 சதவீதமாக குறைத்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ரூ.21 ஆயிரம் கட்டணமாக இருந்தது, அது தற்போது ரூ.10 ஆயிரமாக குறைந்துள்ளது. வார கட்டணம் ரூ.50 ஆயிரம் என்றும், ஒரு காட்சிக்கு ரூ.250 என்றும் டிஜிட்டல் சேவை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

இந்த டிஜிட்டல் சேவை கட்டண குறைப்பு சிறு படத்தயாரிப்பாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். தமிழ் திரையுலகம் இனிமேல் 100 சதவீதம் வெளிப்படையாக இயங்கும். திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை இன்னும் ஒரு மாதத்தில் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.


தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தியேட்டரிலும் எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள்? எவ்வளவு கட்டணம் வசூல்? என்பது சென்னையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் இருந்து பார்க்கும்படி அது அமையும். ஆன்-லைன் கட்டணம் ரூ.30 பாரமாக இருந்தது. தயாரிப்பாளர்கள் சங்கமே புதிய இணையதளம் வைத்து இந்த கட்டணத்தை நீக்குவதற்கு முன்வந்துள்ளது.

தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் சிறுபடங்களுக்கு குறைந்தபட்ச கட்டணமும், பெரிய படங்களுக்கு அதிக கட்டணமும் வசூலிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50-ம், அதிகபட்ச கட்டணமாக ரூ.150-ம் இருக்கும். 150 ரூபாய்க்கு மேல் டிக்கெட்டுகள் விற்கப்படமாட்டாது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

புதிய படங்கள் ரிலீஸ்

படங்கள் திரையிடுவதும் முறைப்படுத்தப்படும். இதற்காக தனி அட்டவணை உருவாக்கப்படும். ஒவ்வொரு மாதமும் திரைக்கு வரும் படங்களின் தேதி முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படும். பட அதிபர்கள் கோரிக்கைகள் நிறைவேறியதில் மகிழ்ச்சி. இதற்காக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

தியேட்டர்களில் புதிய படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரிலீஸ் ஆகும். முதலாவதாக ‘மெர்குரி’ படமும், மேலும் 2 சிறிய பட்ஜெட் படங்களும் திரைக்கு வரும். சினிமா படப்பிடிப்புகளும் நாளை முதல் தொடங்கப்படும். ‘காலா’, ‘விஸ்வரூபம்-2’ படங்கள் எப்போது திரைக்கு வரும் என்பதை படக்குழுவினர் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி