கடனை திருப்பி செலுத்தாதது எதற்காக..? லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு..!!


நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து அவருடைய இளைய மகள் சவுந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற 3டி அனிமே‌ஷன் படத்தை இயக்கினார். இந்தப் படம் 2014 மே மாதம் வெளியானது.

தயாரிப்புப் பணிக்காக பெங்களூருவை சேர்ந்த ஆட் பீரோ என்னும் விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின் மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது.

இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் அதில் ‘கோச்சடையான்’ திரைப்பட உரிமையை வழங்க மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ஆட் பீரோ நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததோடு வேறு நிறுவனத்திற்கு பட வெளியீடு உரிமை வழங்கப்பட்டது. இதையடுத்து ஆட் பீரோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

கடனாக வாங்கிய பணம் வட்டியுடன் ரூ.14.90 கோடி என்றும் அதில் ரூ. 8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதம் ரூ.6.20 கோடி தொகையைத் தரவில்லை என்றும் ஆட் பீரோ நிறுவனம் குற்றம் சாட்டியது.


லதா ரஜினிகாந்த் மீது புகார் அளித்தும் போதிய ஆதாரம் இல்லை என்று ஆட் பீரோ நிறுவனத்தின் மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால் அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் லதா ரஜினிகாந்துக்கு தொகையை திருப்பி தர 3 மாதங்கள் கெடு வழங்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 16-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை லதா ரஜினிகாந்தோ அல்லது மீடியா ஒன் நிறுவனமோ ஜூலை 3-ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அந்த அவகாசம் இன்றுடன் முடிந்ததால் இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினிகாந்துக்கு நிலுவைத் தொகையை எப்போது தருவீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு வரும் 10-ந் தேதி வரை கெடு விதித்து இருக்கிறது. 10-ந்தேதிக்குள் தெரிவிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!