அப்போ பொய் சொன்னோம்… ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட்ஜெட் இவ்வளவுதான் – செல்வராகவன் டுவிட்

கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் பட பட்ஜெட் குறித்த ரகசியத்தை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இப்படம் வெளியான போது விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வியாபார ரீதியாக பெரியளவில் சோபிக்கவில்லை என்றே கூறப்பட்டது.

இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் பட பட்ஜெட் குறித்த ரகசியத்தை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ.18 கோடி தான், ஆனால் இதனை ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்தி காட்டுவதற்காக ரூ.32 கோடி பட்ஜெட் படமாக அறிவிக்க முடிவு செய்தோம்.

என்ன ஒரு முட்டாள்தனம். உண்மையான பட்ஜெட் தொகையை படம் வசூலித்திருந்தாலும் அது சராசரியான வசூல் என்றே கருதப்பட்டது. இதன்மூலம், என்ன முரண்பாடாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக்கொண்டேன்”. இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் விரைவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், இப்படம் வருகிற 2024-ம் ஆண்டு வெளியாகும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!