காடன் – விமர்சனம்

நடிகர் ராணா டகுபதி
நடிகை ஜோயா ஹுசைன்
இயக்குனர் பிரபு சாலமன்
இசை ஷாந்தனு மொய்த்ரா
ஓளிப்பதிவு ஏ.ஆர்.அசோக்குமார்
தங்களுக்கு சொந்தமான காட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுகின்றனர் ராணாவின் குடும்பத்தினர். சிறுவயதில் இருந்தே அந்த காட்டில் வளரும் ராணா, அந்த காட்டின் பாதுகாவலராக இருக்கிறார். சரளமாக ஆங்கிலமும் பேசி அசத்துகிறார். அந்தக் காட்டுக்குள் வாழும் யானைகள், புலிகள் ஆகியவற்றுக்கு அவர் பாதுகாப்பாக விளங்குகிறார்.

அந்தக் காட்டை அழித்து ஒரு குடியிருப்பை உருவாக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் முயல்கிறது. காட்டை அழித்து குடியிருப்பு கட்டினால் வனவிலங்குகள் வாழ்விடத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதனால் ராணா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து என்ன ஆனது?. இதனை ராணா தடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காடனாக நடித்துள்ள ராணா, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வனத்துக்கும், விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள உறவை தன் நடிப்பின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

யானைப் பாகனாக நடித்துள்ள விஷ்ணு விஷால் குறைந்த அளவிலான காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார். இவருக்கும் ஜோயா ஹுசைனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. பத்திரிகையாளராக வரும் ஸ்ரேயா பில்கனோகரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குனர் பிரபு சாலமன், அசாமின் காசியாபாத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். காடுகள் அழிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லியுள்ள விதம் அருமை. காடுகளின் முக்கியத்துவத்தை பற்றி சொல்ல முயற்சித்துள்ள இயக்குனர், திரைக்கதையில் சற்று சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால், காடன் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

ஏ.ஆர்.அசோக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம், காடுகளின் எழில் கொஞ்சும் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார். ஷாந்தனு மொய்த்ராவின் இசையில் பாடல் இனிமை. பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவையும் சிறப்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘காடன்’ காட்டின் காதலன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!