செந்தா – விமர்சனம்

நடிகர் ஸ்ரீ மகேஷ்
நடிகை தீபா உமாபதி
இயக்குனர் சகாயநாதன்
இசை டி.எஸ்.முரளிதரன்
ஓளிப்பதிவு பால் லிவிங்ஸ்டன்
பள்ளியில் படித்து வரும் நாயகி செந்தாமரை, தன்னுடன் படிக்கும் சிவாவை காதலித்து வருகிறார். சிவாவிற்கு நண்பராகவும், செந்தாமரையின் குடும்ப நண்பராகவும் சூர்யா இருக்கிறார். சிவாவை காதலிக்கும் விஷயம் செந்தாமரையின் பெற்றோர்களுக்கு தெரிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பெற்றோர்களின் எதிர்ப்பால் சிவாவுடன் பழகுவதை நிறுத்திக் கொள்கிறார் செந்தாமரை. பின்னர் செந்தாமரையை சூர்யாவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இதற்கு சூர்யா மறுக்க, வேறொருவருக்கு செந்தாமரையை திருமணம் செய்து வைக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு செந்தாமரையின் கணவர் இறக்க, அவரது வாழ்க்கை கேள்வி குறியாகிறது. இறுதியில் செந்தாமரையின் நிலைமை என்ன? மீண்டும் காதலருடன் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சூர்யா, சிவா கதாபாத்திரத்தில் டிட்டோ, ஸ்ரீ மகேஷ் நடித்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாயகியாக செந்தாமரை கதாபாத்திரத்தில் தீபா உமாபதி நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படம் என்பதை நாயகி உணரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

கதை எழுதி தயாரித்திருக்கும் வி.மணிபாய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். கதையிலும் சகாயநாதனின் இயக்கத்திலும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் சம்மந்தம் இல்லாதது போல் இருக்கிறது. நிறைய தேவையில்லாத காட்சிகளை புகுத்தி இருக்கிறார்கள்.

பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவும், டி.எஸ்.முரளிதரனின் இசையும் படத்திற்கு பெரியதாக கைக்கொடுக்கவில்லை.

மொத்தத்தில் ‘செந்தா’ ஓவர் பந்தா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!