நடிகைகள் ராகிணி, சஞ்சனா மீது 2900 பக்க குற்றப்பத்திரிகை தயார் – சூடுபிடிக்கும் போதைப்பொருள் வழக்கு

நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்தது தொடர்பாக போலீசார் தகவல்களை திரட்டி குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.

பெங்களூருவில் நடந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். ராகிணி, சஞ்சனா ஆகியோர் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான வழக்கில் 2900 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் சேர்த்திருக்கும் சொத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து இருப்பது தொடர்பாக போலீசார் தகவல்களை திரட்டி அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதன்படி நடிகை ராகிணிதிவேதி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும், நடிகை சஞ்சனா கல்ராணி ரூ.14 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெரிய பட்ஜெட் படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்றும், சினிமா மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மற்றும் அதில் கலந்து கொள்பவர்களிடம் பணம் வசூலித்தது உள்பட சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத வருமானம் தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு பெரும் பின்னடைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் 180 சாட்சிகள் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!