வேட்டைநாய் – விமர்சனம்

நடிகர் ஆர்கே சுரேஷ்
நடிகை சுபிக்ஷா
இயக்குனர் ஜெய்சங்கர்
இசை ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு முனீஷ் எம் ஈஸ்வரன்
கொடைக்கானல் பகுதியில் மாமா, அத்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஆர்.கே.சுரேஷ். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் ராம்கியிடம் அடியாளாக வேலை பார்க்கும் ஆர்.கே.சுரேஷ், அவர் சொல்லும் குற்ற செயல்களை செய்து வருகிறார். இந்நிலையில் சுபிக்‌ஷாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் ஆர்கே.சுரேஷ். துரத்தி துரத்தி காதலித்து ஒரு கட்டத்தில் அவரையே திருமணமும் செய்துகொள்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு, ராம்கியிடம் ஆர்.கே.சுரேஷ் வேலைக்கு செல்வதை தடுக்கிறார். அதே சமயம், ஆர்.கே.சுரேஷால் பாதிக்கப்பட்ட ஒரு கும்பலும், ராம்கியிடம் அடியாளாக இருப்பவரும் அவரை கொல்ல முயற்சி செய்கிறார்கள். இறுதியில் ஆர்.கே.சுரேஷ் மனைவி சுபிக்‌ஷாவின் பேச்சைக் கேட்டு திருந்தினாரா? எதிரிகளிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக ஆர்கே.சுரேஷ். முதல் பாதியில் குற்ற செயல்களில் ஈடுபடுவது, சுபிக்‌ஷாவை துரத்தி துரத்தி காதலிப்பது என்பது எதிர்மறையாக தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் தன் தவறுகளை உணர்ந்து திருந்தும்போது தேர்ந்த நடிகராக பரிணாமிக்கிறார். இறுதிக்காட்சிகளில் உருக்கமாக நடித்து கவர்கிறார். சுயநலத்துக்காக ஆர்கே.சுரேஷை பயன்படுத்திக்கொள்ளும் கதாபாத்திரத்தில் ராம்கி. தோற்றத்திலும் நடிப்பிலும் ஸ்டைலாக கலக்கி என்றும் நாயகன் என்று நிரூபித்திருக்கிறார்.

நாயகி சுபிக்‌ஷாவுக்கு கதையை தாங்கும் வேடம். இடைவேளை வரை அழகு பதுமையாக வருபவர் ஆர்கே.சுரேஷை திருமணம் செய்துகொண்ட பிறகு பொறுப்பான பெண்ணாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷிடம் கோபப்படுவது, கணவர் சந்தேகப்படுவதாக நினைப்பது, பள்ளி பருவத்தில் வெகுளியான நடிப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்ற கதாபாத்திரங்களான ஜோதிமணி, விஜய் கார்த்திக், நமோ நாராயணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை, பெண்கள் பேச்சை கேட்காத ஆண்களின் நிலைமையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய்சங்கர். கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் உள்ள நீளத்தை குறைத்திருக்கலாம். இன்னும் கூட கதாபாத்திரங்களிடையே வேலை வாங்கி இருக்கலாம்.

கணேஷ் சந்திரசேகரனின் இசை படத்துக்கு ஓரளவிற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணியிலும் கவனிக்க வைத்திருக்கிறார். முனீஸ் ஈஸ்வரனின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் மலையழகு ரம்மியம்.

மொத்தத்தில் ‘வேட்டை நாய்’ குடும்ப பிணைப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!