கன்னி ராசி – விமர்சனம்

நடிகர் விமல்
நடிகை வரலட்சுமி
இயக்குனர் முத்துகுமரன்
இசை விஷால் சந்திரசேகர்
ஓளிப்பதிவு எஸ் செல்வகுமார்
கன்னி ராசிக்காரரான பாண்டியராஜன் தென்காசியில் வசித்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்கிறார். இவருக்கு நான்கு ஆண்குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் காதல் திருமணம் தான் செய்துவைக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிறார் பாண்டியராஜன்.

தந்தையின் ஆசைப்படி அவருடைய மூன்று பசங்களும், அவருடைய பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். கடைக்குட்டியான விமலுக்கு காதல்னாலே பிடிக்காது. இதனால் கல்யாணமே பண்ணாமல் இருக்கிறார். விமலுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது? அது காதல் திருமணமா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

நாயகன் விமல் நேர்த்தியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜெமினி கணேசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக ஜெமினி கணேசன் என்றால் காதல் மன்னன் என்பார்கள். ஆனால் இந்த படத்தில் நாயகனோ காதலே வேண்டாம் என்று அடம்பிடிக்கிறார். நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரியின் மகளாக நடித்துள்ளார். கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு, காளி வெங்கட் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே உள்ளது. இத்தனை பேர் இருந்தும் ஒன்றிரண்டு இடங்களில் தான் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பல இடங்களில் காமெடி கைகொடுக்காதது படத்திற்கு பின்னடைவு.

கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இயக்குனர் முத்துக்குமரன், குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறமையான நடிகர்களை படத்தில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் அவர்களது திறமைக்கு ஏற்ற வேடம் படத்தில் இல்லை என்பது கவலை அளிக்கிறது.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். செல்வக்குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.

மொத்தத்தில் ‘கன்னி ராசி’ கலகலப்பில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!