இது என் காதல் புத்தகம் – விமர்சனம்

நடிகர் ஜெமிஜேகப்
நடிகை அஞ்சிதா ஸ்ரீ
இயக்குனர் மது ஜி கமலம்
இசை ஸ்ரீ மாதவ்
ஓளிப்பதிவு அருண் கிருஷ்ணா
சுந்தரகாண்டம் என்னும் ஊரில் தலைவராக இருப்பவர், மக்கள் யாரும் படிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார். படுத்துவிட்டால் அனைவரும் பெரிய ஆள் ஆகி விடுவார்கள் என்று பள்ளிக்கூடம் கூட கட்டாமல் இருக்கிறார்.

ஆனால் தலைவரின் மகளான நாயகி அஞ்சிதா ஸ்ரீ படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வளர்ந்தவுடன் நண்பர் ஒருவர் மூலமாக கதை புத்தகங்களை வாங்கி படிக்கிறார். கதாசிரியர் ஜெமிஜேகப் எழுதிய கதைகளை படித்து அவருக்கு ரசிகை ஆகிறார் அஞ்சிதா ஸ்ரீ.

படிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தந்தையிடம் கூற, அதற்கு அவர் படிப்பு வேண்டாம் என்று கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். திருமணத்திற்கு பயந்து கதாசிரியர் ஜெமிஜேகப் தேடி ஊரை விட்டு செல்கிறார்.

இறுதியில் கதாசிரியரை தேடிச்சென்ற அஞ்சிதா ஸ்ரீ வாழ்க்கை என்ன ஆனது? படிக்கும் ஆர்வம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் அஞ்சிதா ஸ்ரீ, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகி அதிகம் முக்கியத்துவம் உள்ள படம் என்பதை உணர்ந்து ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மது ஜி கமலம். நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் தடுமாறியிருக்கிறார். திரைக்கதை எதை நோக்கிச் செல்வது என்று தெரியாமல் செல்கிறது. அடுத்தடுத்து காட்சிகள் சம்பந்தமில்லாமல் இருப்பது தேவையில்லாத கதாபாத்திரங்கள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல் மட்டும் கேட்கும் ரகம். அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘இது என் காதல் புத்தகம்’ படிக்க முடியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!