அல்டி – விமர்சனம்

நடிகர் அன்பு மயில்சாமி
நடிகை மனிஷா ஜித்
இயக்குனர் எம்.ஜே.ஹுசைன்
இசை ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு ஆறுமுகம்
அன்பு, சென்ராயன், யாசி ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் செல்போன் திருட்டில் ஈடுபடுகிறார்கள். பிறகு அதையே தங்களது வேலையாக செய்கிறார்கள். அப்போது, கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ மகனின் செல்போன் இவர்களுக்கு கிடைக்க, அந்த போனில் இருக்கும் வீடியோ ஒன்றுக்காக போலீஸ் இவர்களை தேடுகிறது.

இன்னொரு பக்கம், மகனை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கும் எம்.எல்.ஏ-வும் இவர்களை துரத்த, அவர்களிடம் இருந்து இந்த மூன்று இளைஞர்களும் தப்பித்தார்களா? இல்லையா?, எம்.எல்.ஏ-வின் மகனை கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்றாலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பெரிதும் மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. நாயகி மனிஷா ஜித்துக்கு படத்தில் குறைவான காட்சிகளே உள்ளன. பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து ஏமாற்றம் அளிக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக வரும் சென்ராயன் மற்றும் யாசிப் ஆகிய இருவரும் கவனிக்க வைக்கிறார்கள். போலீஸ் கதாப்பாத்திரத்தில் வரும் நடன இயக்குநர் ராபர்ட், வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் மாரிமுத்து, தலைமைக்காவலராக வரும் பசங்க சிவக்குமார், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

அறிமுக இயக்குனர் எம்.ஜே.ஹுசைன் திரைக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். முதல்பாதியில் செல்போன் திருட்டுகள் எப்படி நடக்கின்றன? திருடப்பட்ட செல்போன்கள் எங்குபோய் எப்படி உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளக்கமாகக் காட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரு கொலையின் பின்னணியை வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் துள்ளல் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு வலுசேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘அல்டி’ விறுவிறுப்பு.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!