மாயவன் – சினிமா விமர்சனம்


போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷன் குற்றவாளி ஒருவனை துரத்திக் கொண்டு ஓடும் போது, திறந்திருந்த வீடு ஒன்றில் ஒருவர் தனது மனைவியை துடிதுடிக்க கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின்னர் சந்தீப்புக்கும் அவருக்கும் நடந்த சண்டையில், சந்தீப்பையும் அவர் கொலை செய்ய முயற்சி செய்ய, சந்தீப் கொலையாளியை கொன்று விடுகிறார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தீப் உடல்நிலை சரியான பிறகு பணிக்கு திரும்புகிறார். அவர் பணியில் சேர்வதற்கு முன்பு மருத்துவரிடம் இருந்து சரியான மனநிலையில் இருப்பதற்கான சான்றிதழ் வாங்கி வரும்படி அவரது உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதன்படி மனநல மருத்துவரான லாவண்யா திரிபாதியிடம் செல்லும் சந்தீப், சரியான மனநிலையில் இல்லை என்றும், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் லாவண்யா கூறுகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

லாவண்யாவின் பேச்சை கேட்காமல் மீண்டும் பணிக்கு திரும்பும் சந்தீப் அடுத்ததாக மற்றொரு கொலையை பார்க்கிறார். முதல் கொலைக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்கிறார். இதனால் மனதளவில் பயப்படும் அவரை பார்க்க வரும் லாவண்யா, அவருக்கு சிகிச்சை அளித்து தேற்றி அனுப்ப குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கிறார் சந்தீப்.


இந்நிலையில் மூன்றாவது கொலை நடப்பதற்கு முன்பே அதை தடுக்க நினைக்கும் சந்தீப், முதல் இரு கொலைகளை செய்தவர்களின் செய்கையும், மனநல நிபுணரான டேனியல் பாலாஜியின் செய்கையும் ஒரே மாதிரி இருப்பதை கண்டுபிடிக்கிறார். பின்னர் டேனியல் பாலாஜியை யாரோ இயக்குவதையும் தனது குழு மூலம் கண்டுபிடிக்கிறார்.

கடைசியில், சந்தீப் அந்த மாயவனை கண்டுபிடித்தாரா? தொடர் கொலைகளுக்கு காரணமான மாயவன் யார்? ஏன் இந்த கொலைகளை செய்கிறான்? டேனியல் பாலாஜி என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சந்தீப் ஒரு போலீஸ் அதிகாரியாக வாழ முயற்சி செய்திருக்கிறார். மாயவன் யார் என்பதே தெரியாமல் குழம்பும் காட்சிகள், லாவண்யாவுடன் சண்டை பிடிக்கும் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. லாவண்யா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். சந்தீப் – லாவண்யா வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஜேக்கி ஷெராப் இராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.


கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜி இந்த படத்திலும் மிரட்டியிருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. மற்றபடி, கே.எஸ்.ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், மைம் கோபி முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பகவதி பெருமாள் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

முதலில் படம் முழுக்க விறுவிறுப்பை கூட்டும்படி எடுத்திருக்கும் இயக்குநர் சி.வி.குமாருக்கு பாராட்டுக்கள். கொலை பற்றிய விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை எளிதில் சொல்லும் படி இருந்தாலும், அதற்கான திரைக்கதை எளிதில் புரியும்படியாக இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. மாயவன் யார் என்பதில் த்ரில், டுவிஸ்ட் வைத்து காட்டியிருப்பது சிறப்பு. ஒரு நல்ல முயற்சி.

பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `மாயவன்’ ரகசியமானவன். -Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!