சோனு சூட்டை கடவுளாக வழிபடும் மக்கள்

புலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டை மக்கள் கடவுளாக வழிபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு வேலைக்காகச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

சிக்கி வேலையிழந்து தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்களும் அடக்கம். இதுமட்டுமின்றி, தனது 6 மாடி ஹோட்டலை மருத்துவர்கள் தங்கி ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு நடிகர் சோனு சூட் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சோனு சூட்டின் உதவியை நினைத்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் முக்கிய சாலை சந்திப்பில் ஒரு குழுவினர் சோனு சூட்டின் பிரமாண்ட பேனரை வைத்து வழிபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் மன்னர் என்று சோனு சூட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ள தொழிலாளர்கள், அவர் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்திய வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!