கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – விமர்சனம்

நடிகர் துல்கர் சல்மான்
நடிகை ரிது வர்மா
இயக்குனர் தேசிங் பெரியசாமி
இசை மசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
ஓளிப்பதிவு கே.எம்.பாஸ்கர்
நாயகன் துல்கர் சல்மானும், ரக்‌ஷனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்து கொண்டு ஆப் மூலம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நாயகி ரிது வர்மாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் துல்கர் சல்மான்.

இருவரும் காதலித்து வரும் நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனன் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அதன்பின் துல்கர் சல்மானின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படமாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுக்க என்ன இருக்கிறது என்று தியேட்டரில் போய் உட்கார்ந்தால், முழு நேரமும் உங்களை எழுந்திரிருக்க விடாமல் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள். இதுதான் இந்த கதையின் சிறப்பம்சம்.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானுக்கு இப்படம் 25-வது படம். சத்தமே இல்லாமல் வெளியானாலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவிற்கு நடித்திருக்கிறார். நண்பராக வரும் ரக்‌ஷன் ஆங்காங்கே காமெடியில் கலக்கி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மா அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பிற்பாதியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் நிரஞ்சனிக்கு கொஞ்சம் சீரியசான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் நடிகராக முத்திரை பதித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். இவரது குரல் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் பெற்ற இவரை, இனிமேல் ஸ்டைலிஷ் நடிகர் என்றே அழைக்கலாம்.

முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை சுவாரஸ்யமாக எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. திரைக்கதையில் பல திருப்பங்கள் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களை மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

மசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் ரகம். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கண்களுக்கு விருந்து.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!