கொடி வீரன் – சினிமா விமர்சனம்


ஊரில் குறி சொல்பவராக இருக்கிறார் சசிகுமார். இவர் தங்கை சனுஷா மீது பெரும் பாசம் கொண்டு வருகிறார். கல்லூரியில் சனுஷாவுடன் படித்து வரும் நாயகி மகிமாவை பார்த்தவுடன் சசிகுமாருக்கு பிடித்து விடுகிறது. சனுஷாவும், தன்னுடைய அண்ணன் சசிகுமாரை திருமணம் செய்துக்கொள்ள மகிமாவிடம் கேட்கிறார்.

அதற்கு மகிமா, உன் அண்ணனை திருமணம் செய்ய வேண்டும் என்றால், என் அண்ணன் வித்தார்த்தை திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். இதற்கு சசிகுமார் சம்மதம் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், வட்டாட்சியரான வித்தார்த்தை அதே ஊரில் இருக்கும் பசுபதி, தன் தங்கையின் கணவர் விஷயத்தில் அவர் பிரச்சனை செய்வதால், வித்தார்த்தை கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

வித்தார்த்தை விட்டுவிடும்படி பசுபதியிடம் கேட்கிறார் சசிகுமார். ஆனால் பசுபதியோ தொடர்ந்து கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார். இறுதியில் பசுபதி, வித்தார்த்தை கொலை செய்தாரா? வித்தார்த்தை சசிகுமார் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், குறி சொல்பவராகவும், தங்கை மீது பாசம் கொண்டவராகவும், கோபம் வந்தால், வீரனாகவும் நடித்திருக்கிறார். அவருக்கே உரிய பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி மகிமா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருக்கிறார் சனுஷா. ’’இந்த ஊரு எங்க அண்ணன் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சுப் பார்த்ததில்லையே” என்று அண்ணனை புகழ்ந்து பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் பூர்ணாவின் நடிப்பு அருமை. இப்படத்திற்காக மொட்டைப் போட்டு, வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் பசுபதி. இவர் ’’நீங்க நினைச்சவுடனே செய்ய அவன் ஆயிரத்தில ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்” என்று சசிகுமாரை புகழ்ந்து பேசுவது ஏற்கமுடியவில்லை. வட்டாட்சியராக வந்து மனதை கவர்ந்திருக்கிறார் வித்தார்த்.

குட்டிப்புலி, கொம்பன், மருது பட வரிசையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா. வழக்கமாக குடும்பம் சார்ந்த கதையை எடுக்கும் முத்தையா, இந்தப் படத்தில் அண்ணன் தங்கை, மாமன் மச்சான் உறவை கதைக்களமாக வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். வெட்டு, குத்து, காட்சிகளை குறைத்திருக்கலாம். கர்ப்பிணி தாய் தற்கொலை செய்யும் காட்சி நெருடலை தருகிறது.

ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். கதீரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் ‘கொடி வீரன்’ பாசக்காரன். – Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!