உற்றான் – விமர்சனம்

நடிகர் ரோஷன் உதயகுமார்
நடிகை ஹிரோஷினி கோமலி
இயக்குனர் ராஜா கஜினி
இசை என்.ஆர்.ரகுநந்தன்
ஓளிப்பதிவு ஹாலிக் பிரபு
ரோஷன் உதயகுமார், கானா சுதாகர் இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். கானா சுதாகரின் அக்கா பிரியங்கா அதே கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். ரோஷன் உதயகுமார், கானா சுதாகர் இருவரையும் பிரியங்கா தனது மகன்கள் போல பாதுகாத்து வளர்க்கிறார்.

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் நாயகன், கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெறுகிறார். இதனால் ஏற்படும் பகையில், ரோஷனுக்கு எதிரிகள் முளைக்கிறார்கள். ஊர் பெரிய மனிதராக வரும் வேல.ராமமூர்த்திக்கு ரோஷனை பிடிக்காமல் போகிறது. அந்த பகுதியில் பெரிய ஆளாக வலம் வரும் ரவிஷங்கர் ரோஷனை பாதுகாக்கிறார்.

இதற்கிடையே ரோஷன் படிக்கும் கல்லூரியை இருபாலருக்குமான கல்லூரியாக மாற்றுகிறார்கள். அங்கு படிக்க வரும் நாயகி கோமலி மீது ரோஷன் காதல் வயப்படுகிறார். கோமலியின் தந்தை மதுசூதனன் இதனை எதிர்க்கிறார். இந்த பகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரோஷனை துரத்துகிறது. அதை நாயகன் எவ்வாறு சமாளிக்கிறார். அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.

நாயகன் ரோஷன் உதயகுமார் தமிழுக்கு நல்ல அறிமுகம். டான்ஸ், சண்டை, காதல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அறிமுக படத்திலேயே நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். நாயகி கோமலி அழகு பதுமையுடன் இருக்கிறார். கல்லூரி மாணவி வேடத்திற்கு அழகாக பொருந்தி இருக்கிறார்.

ரோஷனின் நண்பர்களாக வரும் கானா சுதாகர், கோதண்டம், மதுமிதா உள்ளிட்டோரும் வில்லன்களாக வரும் வேல.ராமமூர்த்தி, மதுசூதனன், காதல் சரவணன் உள்ளிட்டோரும் நேர்த்தியாக நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கு உதவும் கதாபாத்திரத்தில் ரவிஷங்கர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் பிரியங்காவும் கண்களாலேயே தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

கல்லூரியை களமாக வைத்து காதலால் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ராஜா கஜினி சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக படத்தை கொண்டு போனவர், இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க படம் வேகம் எடுக்கிறது.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. முதல் பாதியில் வரும் கல்லூரி பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ஹாலிக் பிரபுவின் ஒளிப்பதிவு கச்சிதம்.

மொத்தத்தில் ‘உற்றான்’ கல்லூரி அரசியல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!