என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா – விமர்சனம்

நடிகர் விகாஷ்
நடிகை மதுமிதா
இயக்குனர் நவீன் மணிகண்டன்
இசை எஸ்.ஆர்.ராம்
ஓளிப்பதிவு லோகேஷ்

நாயகன் விகாஷ் ஊரில் வேலைக்கு ஏதும் போகாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவரது அப்பா டெல்லி கணேஷ், மகன் பொறுப்புள்ளவனாக மாற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், விகாஷோ சங்கம் ஒன்று அமைத்து ஊரில் உள்ள பிரச்சனையில் தலையிட்டு வருகிறார்.

இந்நிலையில், நாயகி மதுமிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், இவர்களின் காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை? அதை எப்படி விகாஷ் சமாளித்தார்? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விகாஷ், காதல், காமெடி, ஆக்‌ஷன் என்று நடிப்பில் கவர முயற்சி செய்திருக்கிறார். நாயகி மதுமிதா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான ராமர் காமெடியில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக ராகுல் தாத்தா இரண்டு தோற்றங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்.

அப்பாவாக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அம்மாவாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்ரா நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் கவனிக்க வைத்திருக்கிறது.

வழக்கமான காதல் கதையை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நவீன் மணிகண்டன். காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகள் ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது. டெல்லி கணேஷின் பிளாஸ்பேக் காட்சி ரசிக்க வைக்கிறது.

எஸ்.ஆர்.ராமின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க வைக்கிறது. லோகேஷின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ சுமாரானவன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!