தொட்டு விடும் தூரம் – விமர்சனம்

நடிகர் விவேக்ராஜ்
நடிகை மோனிகா சின்னகோட்ளா
இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன்
இசை நோகா பிரவீன் இமானுவேல்
ஓளிப்பதிவு ராம் குமார்
நாயகன் விவேக்ராஜ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது தாயார் சீதாவுடன் சேர்ந்து விவசாயமும் செய்து வருகிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக நாயகனின் கிராமத்துக்கு செல்கிறார்கள். அந்த குழுவில் நாயகி மோனிகாவும் இடம்பெற்றிருக்கிறார்.

நாயகியை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன் காப்பாற்றுகிறார். இதனால் இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஜாலியாக காதலித்து வரும் சூழலில், நாயகி கேம்ப் முடிந்து சென்னை செல்ல நேர்கிறது. பின்னர் காதலியை தேடி சென்னை செல்லும் நாயகன் சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இறுதியில் அவர், பிரச்சனைகளில் இருந்து மீண்டாரா? காதலியை சந்தித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விவேக் ராஜ், கிராமத்து இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து காட்சிகளில் நேர்த்தியாக நடித்துள்ளார். நாயகி மோனிகா அழகு பதுமையுடன் கூடிய கல்லூரி மாணவியாக நடித்து கவர்கிறார். நாயகனுக்கும், நாயகிக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

நாயகனின் தாயராக நடித்துள்ள சீதா, அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். மற்றபடி சிங்கம்புலி, பால சரவணன், லிவிங்ஸ்டன், கிரேன் மனோகர் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். காமெடி எடுபடாதது படத்திற்கு பின்னடைவு.

இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கிராமத்தில் இருந்து காதலியை தேடி சென்னை வரும் காதலனின் ஒரு காதல் பயணத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார். இறுதியில் சாலை விதிகள், உடல் உறுப்பு தானம் போன்ற சமுதாயத்துக்கு தேவையான கருத்தை சொல்லிய விதம் அருமை.

நோகா பிரவீன் இமானுவேலின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், ராம் குமாரின் ஒளிப்பதிவில் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

மொத்தத்தில் “தொட்டு விடும் தூரம்” காதல் பயணம்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!