தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க கமல் அழைத்தார்: ராகவா லாரன்ஸ்

கமல் ஹாஸனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தலைவன் இருக்கின்றான்
கமல் ஹாஸனின் தலைவன் இருக்கின்றான் படம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து அந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்யப் போவதாக கமல் ஹாஸன் கடந்த மாதம் சென்னையில் நடந்த உங்கள் நான் நிகழ்ச்சியில் அறிவித்தார். அந்த படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் லைகா சேர்ந்து தயாரிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ராகவா லாரன்ஸ்
கமல் ஹாஸன் நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அந்த படத்தில் நடிக்குமாறு கமல் தன்னிடம் கேட்டதாகவும் ஆனால் தான் கால பைரவா படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனதாகவும் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார். ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த அந்த கொண்டாட்டத்திற்கு தீவிர ரசிகனான ராகவா லாரன்ஸ் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மி பாம்ப்
தலைவன் இருக்கின்றான் படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்திருந்த நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்திலும் நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா படத்தை அக்ஷய் குமாரை வைத்து லக்ஷ்மி பாம்ப் என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். அந்த படத்தை ரீமேக் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு ஒரு வழியாக தீர்ந்தது. லக்ஷ்மி பாம்ப் படம் மூலம் ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

கமல்போஸ்டர் சர்ச்சை
முன்னதாக நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் தான் சிறு வயதில் கமல் ஹாஸனின் போஸ்டர் மீது சாணி அடித்ததாக தெரிவித்தார். அதை கேட்ட கமல் ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் மீது கோபப்பட்டு அவரை விளாசினார்கள். இதையடுத்து அவர் தன் பேச்சு குறித்து விளக்கம் அளித்ததுடன் தான் எதுவும் தவறாக பேசவில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!