தர்பார் விழாவில் அப்படி நான் என்ன தப்பா பேசினேன்?: ராகவா லாரன்ஸ்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கமல் போஸ்டர் மீது சாணி அடித்ததாக பேசியது குறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தர்பார் இசை திருவிழா
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சிறு வயதில் கமல் ஹாஸன் போஸ்டரில் சாணி அடித்ததாக தெரிவித்தார். மேலும் தற்போது கமலும், ரஜினியும் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பேசினார். சாணி அடித்த விஷயத்தை கேட்ட பலரும் ராகவா லாரன்ஸை விளாசினார்கள். குறிப்பாக கமல் ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் மீது கோபம் அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் விளக்கம்
தலைவரின் தீவிர ரசிகன் என்பதால் சிறு வயதில் கமல் சார் போஸ்டர் மீது சாணி அடித்தேன் என்று நான் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை மட்டும் எடுத்துக் கொண்டு விமர்சித்து சில போஸ்ட்டுகளை பார்த்தேன். அவர்கள் இருவரும் தற்போது கை கோர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் நான் பேசினேன். கமல் சார் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

வீடியோவை பாருங்க
எப்பொழுது நான் ஏதாவது தவறாக பேசியதாக உணர்ந்தால் உடனே மன்னிப்பு கேட்டுவிடுவேன். ஆனால் தற்போது நான் எதுவும் தவறாக பேசவில்லை. முழு வீடியோவையும் பார்த்தால் தெரியும். சிலர் நான் பேசியதை திரிக்கப் பார்க்கிறார்கள். கமல் சார் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதை நான் யாருக்கும் நிரூபிக்கவோ, விளக்கவோ தேவையில்லை. ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த வீடியோ லிங்கை கிளிக் செய்து பார்க்கவும் என்று கூறி ஒரு யூடியூப் லிங்க்கை அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். ஆனால் அந்த வீடியோ வேலை செய்யவில்லை.

கமல், ரஜனி ரசிகர்கள்
தவறு செய்துவிட்டீர்கள். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை போய்விட்டது என்று கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிலரோ, பரவாயில்லை உங்களை மன்னித்துவிட்டோம் என்று கூறியுள்ளனர். ரஜினி ரசிகர்கள் சிலரோ, விடுங்க ப்ரோ. நீங்கள் பேசியதில் தவறு இல்லை என்பது எங்களுக்கு தெரியும். தலைவர் சொன்னது போன்று பாசிட்டிவாக மட்டும் யோசிக்கவும். பேசுவபவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!