நாட் ரீச்சபிள் – விமர்சனம்

போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. ஆனால், எதிர்முனையில் இருந்து எந்த குரலும் கேட்கவில்லை. உடனே அழைப்பு வந்த இடத்துக்கு போலீஸ் டீம் விரைகிறது.
அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தூக்கில் தொங்குகிறாள். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் லாவண்யா என தெரிகிறது. ஆனால் கண்ட்ரோல் ரூமுக்கு வந்த போன் எண் வர்ஷா என்ற பெண் பெயரில் உள்ளது. வர்ஷாவும் ஆபத்தில் இருப்பதை உணரும் போலீஸ் அவளை தேடுகிறது. இந்த நிலையில், ஹேமா என்ற இளம் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படுகிறாள்.

மன நலம் பாதித்த அவளை சிகிச்சைக்காக காப்பகத்தில் அவளது அம்மா சேர்க்கிறார். ஹேமா மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்படுவது தொடர்கிறது!   இதற்கிடையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு கல்லூரி பேராசிரியை கொன்று புதைக்கப்பட்டதை போலீஸ் கண்டறிகிறது. லாவண்யா கொலைக்கும், பேராசிரியை கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா?   இந்த கொலைகளுக்கும் (போலீஸ் உதவியை நாடிய) வர்ஷா காணாமல் போனதற்கும் தொடர்பு இருக்கிறதா? ஹேமாவுக்கு எதனால் மனநலம் பாதித்தது? அதிலிருந்து அவள் மீண்டாளா? என்கிற மர்ம முடிச்சுகளை இடைவேளைக்குப்பின், ஒவ்வொன்றாக அவிழ்வதே படத்தின் மீதிகதை.  

கதாநாயகன் விஷ்வா, போலீஸ் வேடத்துக்கு ஓரளவுக்கு பொருத்தமாக இருக்கிறார். அவர் விசாரணை நடத்தும் விதம், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சாய் தன்யா, சுபா, காதல் சரவணன், பிர்லா போஸ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.   வித்தியாசமான கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சந்துரு முருகானந்தம். விறுவிறுப்பாக கதை சொல்ல இயக்குனர் முயற்சித்து இருக்கிறார். திரைக்கதையில் வேகம் போதாது. சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவிலும், சரண் குமார் இசையிலும் ஆர்வக்கோளாறு தெரிகிறது. பின்னணி இசையில் வாத்தியங்கள் அலறுகின்றன. மொத்தத்தில் ‘நாட் ரீச்சபிள்’ நாட் பேட்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!